கடல்வழியாக ஆட்கடத்தலில் ஈடுபடுவோர் தொடர்பில் பாதுகாப்பு தரப்பு வெளியிட்ட பரபரப்பு தகவல்!

இலங்கையில் இருந்து கடல் மார்க்கமாக நாட்டை விட்டு வெளியேறும் சட்டவிரோதக் இடப்பெயர்வாளர்கள் தொடர்பில் பல்வேறு தகவல்கள் வெளியாகி வருவதாக பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த நபர்களை வேறு நாடுகளுக்கு அனுப்புவதாகக் கூறி அவர்களிடம் இருந்து பணம் பறிக்கும் ஒழுங்கமைக்கப்பட்ட மோசடி ஒன்று இடம்பெற்றுள்ளதாக பாதுகாப்புப் படையினர் தற்போது அம்பலப்படுத்தியுள்ளனர்.

கடந்த சில நாட்களாக இலங்கையர்கள் சிலர் படகு மூலம் அவுஸ்திரேலியாவிற்கு சட்டவிரோதமாக செல்ல முயற்சிப்பதாக தகவல் வெளியாகியிருந்தது.

இவர்களில் பெரும்பாலானோர் கடற்படை உள்ளிட்ட பாதுகாப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், நாட்டில் நிலவும் பிரச்சினை காரணமாக நாட்டை விட்டு வெளியேற முயற்சித்துள்ளதாக விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

ஒவ்வொருவரிடமிருந்தும் 700,000 ரூபாய் முதல் 1 மில்லியன் ரூபாய் வரை பணத்தை கடத்தல்காரர்கள் பெற்றுக்கொள்வதாகவும் படகிற்குள் ஏறியதும் கடத்தல்காரர்களே பாதுகாப்புப் படையினருக்கு இடப்பெயர்வாளர்கள் குறித்த தகவல்களை வழங்குவதாகவும் தெரியவந்துள்ளது.

அதேபோல், சிறிய படகுகள் மூலம் கரையில் இருந்து நடுக்கடலில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள படகிற்கு இடப்பெயர்வாளர்களை அழைத்துச் செல்வதற்கு 80 ஆயிரம் முதல் ஒரு இலட்சம் ரூபாய் வரை வசூலிக்கப்படுவதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை சட்டவிரோதமாக படகு மூலம் அவுஸ்திரேலியா நோக்கி பயணித்த 15 இலங்கையர்கள் கடந்த தினம் அவுஸ்திரேலிய கரையோர பாதுகாப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டு மீண்டும் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை இலங்கையில் இருந்து படகுகள் மூலம் ஆட்களை ஏற்றிச் செல்லும் போது, கடத்தல் காரர்களே அவர்களை பாதுகாப்பு தரப்பினரிடம் காட்டிக்கொடுத்து விடுவதாக தெரிவிக்கப்படுகின்றது.