கத்தோலிக்க திருவுருவச் சிலைகள் உடைப்பு- நடவடிக்கை எடுக்குமாறு ரெலோ தலைவர் செல்வம் எம்பி வலியுறுத்தல்

மாவட்டத்தில் தொடர்ச்சியாக கத்தோலிக்க திருவுருவச் சிலைகள் சேதப்படுத்தும் நபர்களை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்று மன்னார் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவரும், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் அவர்கள் கடிதம் அனுப்பியுள்ளார்.

மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக கத்தோலிக்க திருவுருவச் சிலைகள் மீது தாக்குதல் நடத்தி சேதப்படுத்தும் சம்பவம் தொடர்பாக மன்னார் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அவர்களுக்கு இன்றைய தினம் (16) வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் அவர்கள் கடிதம் அனுப்பியுள்ளார்

அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

மன்னார் மாவட்டத்தின் கத்தோலிக்கரின் வணக்கத்திற்குரிய திருவுருவ சிலைகளை இடிப்பது மற்றும் அடித்து நொறுக்குவதை நான் அவதானித்து வருகின்றேன். இத்தகைய செயல் கண்டிக்கத் தக்கது. மன்னார் மாவட்டத்தில் ஒற்றுமையுடனும் அமைதியுடனும் வாழும் கத்தோலிக்கர்களுக்கும் இந்துக்களுக்கும் இடையே பகைமையை உருவாக்கும் செயல் இது இந்த செயற்பாடு அமைதி மற்றும் நல்லிணக்க இயக்கத்திற்கு எதிரான நபர்களின் செயல் என்பதை நான் நன்கு அறிவேன் எனவே காவல் துறையினர் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் அத்துடன் விரைவாக தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் மேலும் அத்தகைய நபர்கள் அடையாளம் காணப்பட்டு சட்டத்தின் முன் கொண்டு வந்து தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். இனிமேல் இது போன்ற சம்பவங்கள் தொடர அனுமதிக்கக் கூடாது என்று அந்த கடிதத்தில் குறிப்பிடப் பட்டுள்ளது.