காணாமற்போனவர்கள் தொடர்பில் எதனையும் மறைப்பதற்கில்லை – டலஸ் அழகப்பெரும

காணாமற்போனவர்கள் தொடர்பில் எதனையும் மறைப்பதற்கில்லை. இதுதொடர்பில் ஒன்றிணைந்த செயற்பாடுகளே அவசியம். இலங்கையர் என்ற ரீதியில் இவ்வாறான துர்ப்பாக்கிய சம்பவம் மீண்டும் ஏற்படாத வகையில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவதே இறுதியான பதிலாகும் என்று அமைச்சரவை பேச்சாளரும் வெகுஜன ஊடக அமைச்சருமான டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று புதன் கிழமை நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர்களுடனான சந்திப்பின் போது, ஊடகவியலாளர் ஒருவரின் கேள்விக்கு அமைச்சர் பதிலளிககையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

மோதல் இடம்பெற்ற காலப்பகுதியில் காணாமற்போனவர்களுக்கு விரைவாக மரணச்சான்றிதல் வழங்கப்படும் என்று ஜனாதபதி தெரிவித்துள்ளார். ஆனால் காணாமல் போனவர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், காணாமற்போனவர்களுக்கு என்ன நடந்தது என்று கேட்கின்றனர்.

அமைச்சர் அவர்களே உண்மையிலேயே இவர்களுக்கு என்ன நடந்தது என்று ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்?

இதற்கு தொடர்ந்து பதிலளித்த அமைச்சரவை பேச்சாளரும் வெகுஜன ஊடக அமைச்சருமான டலஸ் அழகப்பெரும, காணாமற் போனவர்களுக்கு என்ன நடந்தது என்பதை என்னால் திட்டவட்டமாக கூறமுடியாது. இதனைக் கண்டறிவதற்காக இலங்கையில் அலுவலகம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ஜக்கிய நாடுகள் சபை கூட்டத்தொடரில் சபையின் செயலாளர் நாயகத்தை சந்தித்த போது வெளி நாடுகளிலுள்ள புலம்பெயர் டயஸ்போராக்களுக்கு – நாட்டை நேசிப்பவர்களுக்கு பகீரங்க அழைப்பொன்றை விடுத்தார். அதாவது நாம் ஒன்றிணைந்து இதுகுறித்து பேச்சுவாரத்தை நடத்துவோம். தீர்மானங்களை மேற்கொள்வோம் இவர்கள் எமது நாட்டு பிரஜைகள் என்று குறிப்பிட்டிருந்தார்.

இது தொலை நோக்குடனான சாதகமான நிலைப்பாடாகும். நேற்றும் பாராளுமன்றத்தில் இது குறித்து பேசப்படடது. வடக்கை பிரதிநிதித்தும் செய்யும் எமது சகோதர உறுப்பினர்கள் இதுகுறித்து சாதகமாக கருத்து தெரிவித்தனர். திட்டவட்டமாக உதாரணத்திற்கு X என்ற நபர் காணாமற்போனார் என்று வைத்துக்கொள்வோம். இவருக்கு என்னநடந்தது என்ற கேள்விக்கு பதிலளிக்கக்கூடிய அளவுக்கு எமக்கு தெளிவில்லை என்பதை எனது சகோதரர் ஹொமட் (ஊடகவியலாளர்) புரிந்துகொள்வார்.

இதனை எந்தவகையிலும் மறைக்கக்கூடிய விடயமல்ல.எந்த சந்தர்ப்பத்திலாது சரியான தகவல் வெளிப்படலாம். நாம் அதனை அறிந்துகொள்ள முடியும் சில சந்தர்ப்பத்தில் காணாமற் போனவர்கள் சிலர் வெளிநாடுகளில் அரசியல் புகழிடம்பெற்று வாழுகின்றனர். இது அனைத்து சந்தர்ப்பங்களிலும் அல்ல.

தமது பிள்ளைகள் காணமற்போயிருப்பதாகக் பெற்றோர் கண்ணீர் விடும் காட்சியை ஒவ்வொருவருடமும் நாம் காணுக்கின்றோம். இவர்கள் அனைவரும் இலங்கை பிரஜைகள் அதனால் ,நாம் இதுதொடர்பில் பொறுப்புடன் செயல்படவேண்டியுள்ளது. அதனால் அதில் எதனையும் மறைப்பதற்கில்லை. இதுதொடர்பில் ஒன்றிணைந்த செயற்பாடுகளே அவசியம். இலங்கையர் என்ற ரீதியில் இவ்வாறான துர்பாக்கிய சம்பவம் மீண்டும் ஏற்படாத வகையில் செயல்படுவதே இறுதியான பதிலாகும் என்று அமைச்சர் கூறினார்.