காணாமல்போனோரின் குடும்பங்கள் தொடர்பில் பச்செலட் விசேட அவதானம் – உயர்ஸ்தானிகரின் பேச்சாளர் கருத்து

சிவில் சமூக இடைவெளியையும் சுயாதீனமானதும் அனைவரையும் உள்ளடக்கிய கட்டமைப்புக்களையும் உறுதிசெய்வதுடன் தண்டனைகளிலிருந்து விடுபடும் போக்கை முடிவிற்குக்கொண்டுவருவதன் ஊடாக மாத்திரமே இலங்கையினால் நிலைபேறான அபிவிருத்தியையும் சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் அடைந்துகொள்ளமுடியும் என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் ஊடகப்பேச்சாளர் ரவினா ஷம்டசனி வலியுறுத்தியுள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் மிச்சேல் பச்லெட்டின் ஊடகப்பேச்சாளர் ரவினா ஷம்டசனியினால் உயர்ஸ்தானிகரின் இலங்கை தொடர்பான அறிக்கை குறித்து வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

அண்மைய வருடங்களில் இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், மறுசீரமைப்புக்களை மேற்கொள்வதற்காக இலங்கை அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளுக்கு வரவேற்பு தெரிவித்திருக்கும் அதேவேளை, நாட்டின் தற்போதைய மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பில் மிகுந்த கரிசனையும் வெளியிடப்பட்டிருக்கின்றது.

அறிக்கையைத் தயாரித்தல் உள்ளடங்களாக பல்வேறு விடயங்களிலும் எமது அலுவலகத்துடன் இணைந்து செயற்படுவது தொடர்பில் இலங்கை அரசாங்கம் வெளிப்படுத்தியுள்ள உடன்பாட்டை அங்கீகரிக்கும் அதேவேளை, மனித உரிமைகள் விடயத்தில் இலங்கை கொண்டிருக்கும் சர்வதேசக் கடப்பாடுகளைப் பூர்த்திசெய்யக்கூடியவகையில் மிகவும் ஆழமானமுறையில் சட்ட மற்றும் பாதுகாப்புத்துறைசார் கட்டமைப்பு மறுசீரமைப்புக்களை மேற்கொள்ளுமாறு வலியுறுத்துகின்றோம்.

கடந்த காலங்களில் இடம்பெற்ற மனித உரிமைமீறல்கள் தொடர்பில் பொறுப்புக்கூறலை உறுதிசெய்தல் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் உரிமைகளை அங்கீகரித்தல் ஆகிய விடயங்களைப் பொறுத்தமட்டில் பின்னடைவு ஏற்பட்டிருந்தமையினைக் கடந்தகாலத்தில் எம்மால் அவதானிக்கமுடிந்தது.

குறிப்பாக பெரும்பாலும் பெண்களால் பிரதிநிதித்துவப்படுத்தும் காணாமல்போனோரின் குடும்பங்கள் முகங்கொடுத்திருக்கும் பாதுகாப்பற்றநிலை தொடர்பிலும் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அவரது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார். அவர்களின் துன்பத்தைப் புரிந்துகொள்ளுமாறும் காணாமல்போனோர் எங்கிருக்கின்றார்கள் அல்லது அவர்களின் நிலை என்ன? என்ற உண்மையை வெளிப்படுத்துமாறும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான இழப்பீட்டை வழங்குமாறும் குற்றவாளிகளை சட்டத்தின் முன்நிறுத்துமாறும் இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம்.

அத்தோடு தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் இராணுவமயமாக்கல், ஜனநாயகக்கட்டமைப்புக்களின் செயற்பாடுகளைப் பாதிக்கும் வகையிலான இன-மதரீதியான தேசியவாதம், சிறுபான்மையினர் மத்தியில் அதிகரித்துள்ள பதற்றம் நல்லிணக்கத்தை உறுதிசெய்வதில் ஏற்படுத்தப்படும் தாமதம் ஆகிய விடயங்கள் குறித்தும் உயர்ஸ்தானிகரின் அறிக்கையில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

மேலும் சிவில் சமூக அமைப்புக்கள், மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள், கடந்தகால மீறல்களால் பாதிக்கப்பட்டவர்கள் உள்ளிட்ட தரப்பினர் மீதான பாதுகாப்புத்தரப்பினரின் தொடர்கண்காணிப்பு மற்றும் மீறல்கள் தொடர்பில் இம்முறை அறிக்கையிலும் சுட்டிக்காட்டப்பட்டிருப்பதுடன் இத்தகைய நடவடிக்கைகள் குறிப்பாக நாட்டின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மேலோங்கியிருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசாங்கத்தினால் கடந்த பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதி பயங்கரவாத்தடைச்சட்டத்திருத்தங்கள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டமை முக்கியமானதொரு நகர்வாகும். சந்தேகநபர்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ள இடங்களுக்கு விஜயம் செய்வதற்கான நீதிவானின் அதிகாரங்களை உயர்த்துதல், வழக்கு விசாரணைகளைத் துரிதப்படுத்தல், 14 ஆவது சரத்தை நீக்குதல் ஆகிய திருத்த முன்மொழிவுகள் தொடர்பில் உயர்ஸ்தானிகர் வரவேற்பை வெளியிட்டிருக்கின்றார்.

இருப்பினும் ஏனைய திருத்தங்கள், மனித உரிமைகள் தொடர்பில் இலங்கை கொண்டிருக்கும் சர்வதேச கடப்பாடுகளை முழுமையாகப் பூர்த்திசெய்யும்வகையில் அமையவில்லை என்பதுடன் அச்சட்டத்திலுள்ள சில மிகமோசமான சரத்துக்கள் திருத்தியமைக்கப்படாமலிருப்பது தன்னிச்சையாகத் தடுத்துவைக்கப்படல், சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்படல் உள்ளடங்கலாக பாரிய மனித உரிமை மீறல்கள் இடம்பெறுவதற்கு வழிவகுக்கும்.

பயங்கரவாதத்தடைச்சட்டத்தின்கீழ் தடுத்துவைக்கப்பட்டிருந்த சந்தேகநபர்களில் 80 பேருக்கும் மேற்பட்டோர் கடந்த வருடம் ஜுன் மாதத்திலிருந்து விடுவிக்கப்பட்டமையை வரவேற்கும் அதேவேளை, பயங்கரவாதத்தடைச்சட்டத்தின் பிரயோகத்தை இடைநிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் வலியுறுத்துகின்றோம்.

சிவில் சமூக இடைவெளியையும் சுயாதீனமானதும் அனைவரையும் உள்ளடக்கிய கட்டமைப்புக்களையும் உறுதிசெய்வதுடன் தண்டனைகளிலிருந்து விடுபடும் போக்கை முடிவிற்குக்கொண்டுவருவதன் ஊடாக மாத்திரமே இலங்கையினால் நிலைபேறான அபிவிருத்தியையும் சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் அடைந்துகொள்ளமுடியும் என்று அவ்வறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.