குற்றவியல் நடைமுறைக் கோவை திருத்தம் ஜனநாயகத்தின் குரல்வளையை நசுக்கும்; எச்சரிக்கின்றார் சுரேஷ்

தற்போது வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள குற்றவியல் நடைமுறைக் கோவை திருத்த சட்டமூலம் நாட்டு மக்களுக்கு அச்சுறுத்தலாக அமையும் என்பதுடன் ஜனநாயகத்தின் குரல்வளையை நசுக்குவதாக அமையும் என்று ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் பேச்சாளருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர்   வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில்,

“நாட்டில் தற்போது அமுலிலுள்ள குற்றவியல் நடைமுறை தொடர்பான வழிகாட்டல்களில் திருத்தங்களை மேற்கொள்வதற்கான வர்த்தமானி அறிவித்தல் ஒன்று கடந்த 08.10.2021 அன்று அரசால் வெளியிடப்பட்டிருக்கின்றது. இதன் பிரகாரம், ஒருவர் கைது செய்யப்பட்டால் நாற்பத்தெட்டு மணிநேரம் வரையில் அவரை நீதிவான் நீதிமன்றத்திலோ அல்லது மேல்நீதிமன்றத்திலோ ஆஜர்படுத்தாமல் இருப்பதற்கு இந்தத் திருத்தம் வழிவகை செய்கின்றது.ஒரு சந்தேக நபரை நாற்பத்தெட்டு மணிநேரம் காவலில் வைத்திருப்பது என்பது அவரை சித்திரவதை செய்யவும், தமது விருப்பத்திற்கேற்ற வாக்குமூலத்தைப் பெற்றுக்கொள்ளவும் இந்த கால அவகாசங்கள் உதவும் என்றே நாம் நம்புகின்றோம்.

பொலிஸார் தமது தேவை கருதியோ அல்லது வேறு சில அரசியல்வாதியின் தேவை கருதியோ அல்லது தனிப்பட்ட முறையில் தமது நண்பர்களுக்கு உதவும் வகையிலோ இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடவழிவகை செய்கிறது. எனவே, இந்தக் குற்றவியல் நடைமுறைக் கோவை திருத்தங்கள் என்பது ஒட்டுமொத்தமான இலங்கை மக்களுக்கும் பாதகமாகவே அமையும் என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

இவற்றுக்கு அப்பால் அரசுக்கு எதிராகக் குரல்கொடுக்கக்கூடிய சிறிய பெரிய அரசியல் கட்சிகளை ஒடுக்குவதற்கும் அவர்களது குரல்வளையை நசுக்குவதற்கும் ஜனநாயக முற்போக்கு, சிவில் அமைப்புகளின் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துவதற்கும் அவர்களது ஜனநாயக செயற்பாடுகளை முடக்குவதற்கும்கூட இந்தத் திருத்தங்கள் பாவிக்கப்படலாம்” – என்று குறிப்பிடப்பட்டுள்ளது.