கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இலங்கை துறைமுக அதிகாரசபை,இந்தியா – ஜப்பான் நாடுகளுடன் இணைந்து 51-49 வீத உரிமத்தில் அபிவிருத்தி செய்யும் முத்தரப்பு உடன்படிக்கை இறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இது குறித்து ஆராய ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ள அமைச்சரவை உபகுழுவின் அறிக்கை அமைச்சரவைக்கு வழங்கப்படவுள்ளதுடன், 23 தொழிற்சங்கங்களின் கோரிக்கைகளை முழுமையாக நிராகரிக்கவும் அமைச்சரவை உபகுழு தீர்மானித்துள்ளது. கிழக்கு முனைய அபிவிருத்தியில் இந்தியா – ஜப்பான் நாடுகளுடன் செய்துகொண்ட உடன்படிக்கையை மாற்ற முடியாதுள்ளமையும் இந்த தீர்மானத்திற்கு பிரதான காரணம் என்பதை அமைச்சரவை உபகுழு சுட்டிக்காட்டியுள்ளது.
கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனைய முதலீட்டு அபிவிருத்தி வேலைத்திட்டத்தில் பல்வேறு நெருக்கடிகள் எழுந்துள்ளதை அடுத்து இந்த விடயம் குறித்து ஆராய ஜனாதிபதியினால் ஏழுபேர் கொண்ட அமைச்சரவை உபகுழு நியமிக்கப்பட்டது. துறைமுக அதிகார சபையின் செயலாளர் யு.டி.சி ஜெயலால் தலைமையில் நியமிக்கப்பட்ட இந்த குழு இன்று திங்கட்கிழமை ஐந்தாவது தடவையாகவும் கூடி துறைமுக முதலீட்டு வேலைத்திட்டம் குறித்து ஆராய்ந்துள்ளனர்.
இதன்போது துறைமுகத்தை இந்தியாவிற்கு வழங்குவதற்கு எதிர்ப்பை தெரிவித்து துறைமுகத்தின் 23 தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து முன்வைத்த எழுத்து மூல கோரிக்கை, இந்தியா, ஜப்பான் ஆகிய நாடுகளின் பரிந்துரைகள் மற்றும் துறைமுக அதிகார சபையின் பிரதான கோரிக்கை உள்ளிட்ட விடயங்களை இன்று ஆராய்ந்ததுடன் இறுதி தீர்மானத்தையும் எட்டியுள்ளனர்.
இன்றைய பேச்சுவார்த்தை குறித்து அமைச்சரவை உபகுழுவின் தலைவர் யு.டி.சி. ஜெயலால் தெரிவிக்கையில், கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தின் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் குறித்து ஆராய ஜனாதிபதி குழுவொன்றை நியமித்தமைக்கு இந்த வேலைத்திட்டத்தின் உடன்படிக்கைகள், இந்தியா – ஜப்பான் ஆகிய நாடுகளின் கோரிக்கைகள், முதலீடுகள் குறித்து அவர்களின் நிலைப்பாடுகள் மற்றும் இலங்கை துறைமுக தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து முன்வைத்துள்ள கோரிக்கைகள் குறித்து முழுமையாக ஆராயப்பட்டது.
இதில் கிழக்கு முனையத்தை எக்காரணம் கொண்டும் இந்தியாவிற்கு கொடுக்கக்கூடாது எனவும் துறைமுக அதிகார சபையே இதனை தன்வசப்படுத்த வேண்டும் என துறைமுகத்தில் அங்கம் வகிக்கும் 23 தொழிற்சங்கங்களும் கோரிக்கையை முன்வைத்துள்ளனர். ஆனால் இந்த கோரிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது.
தற்போது துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை அபிவிருத்தி செய்யும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ள காரணத்தினாலும், இதில் 51 வீதம் இலங்கை துறைமுக அதிகார சபைக்கும் 49 வீதம் சர்வதேச முதலீட்டாளர்களுக்கும் வழங்கப்படும் என்ற தீர்மானம் இறுதித் தீர்மானமாக உள்ள நிலையில் தொழிற்சங்கங்களின் நிலைப்பாடுகளை ஏற்றுக்கொள்ள முடியாது. அதேபோல் இலங்கைக்கு வரும் முதலீடுகளில் துறைமுகத்தின் அபிவிருத்தியை முழுமையாக மேற்கொள்ள கிடைத்துள்ள வாய்ப்பாக இருக்கின்ற காரணத்தினால் 51-49 வீத உரிமம் என்ற ரீதியிலேயே இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படும்.
அதேபோல் இந்த அபிவிருத்தி வேலைத்திட்டத்தில் இந்தியாவின் நிறுவனமான அதானி நிறுவனம் தமது பரிந்துரைகளை முன்வைத்துள்ளனர், அதேபோல் ஜப்பான் நாட்டின் ஜய்க்கா நிறுவனமும் அவர்களின் பரிந்துரைகளை முன்வைத்துள்ளனர். இந்த இரண்டு தரப்பும் இணைந்தே 49 வீத உரிமத்தில் முதலீடுகளை செய்து துறைமுகத்தின் அபிவிருத்தி பணிகளில் ஈடுபடவுள்ளனர்.
எனவே அவர்களின் பரிந்துரைகளை முழுமையாக ஆராய்ந்துள்ளோம். இந்த துறைமுகம் 35 ஆண்டுகால முதலீட்டு திட்டத்தின் கீழ் வழங்கப்படவுள்ள காரணத்தினால் மூன்று நாடுகளுக்கு இடையிலான ஒப்பந்த உடன்படிக்கைகளையும் ஆராயும் கடமை எம்மிடமே உள்ளது. எனவே தற்போது இறுதிக்கட்ட வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இது குறித்த இறுதி அறிக்கையை இந்த வாரம் அமைச்சரவைக்கு சமர்பிக்கப்படும். அதேபோல் தொழிற்சங்கங்களுடன் இனிமேல் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கப்படாது. அதற்கான அவசியங்கள் ஏற்படாது.
மேலும் இந்த முதலீட்டு அபிவிருத்தி வேலைத்திட்டமானது கடந்த ஆட்சியில் செய்து கொள்ளப்பட்டுள்ள முத்தரப்பு உடன்படிக்கைகள் என்ற காரணத்தினால் உடனடியாக ஒப்பந்தத்தை இரத்து செய்ய முடியாது. எனவே முன்னைய ஆட்சியில் உள்ள பலவீனமான கோரிக்கைகளை நீக்கி, இலங்கைக்கு சாதகமான விதத்திலும், துறைமுக அபிவிருத்தி அதிகார சபையின் ஆதிக்கம் அதிகமாக உள்ள விதத்திலும் இந்த உடன்படிக்கையை செய்துகொள்ள தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது எனவும் கூறினார்.