சட்டமா அதிபரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கை நிராகரிப்பு

கடற்படையின் முன்னாள் தளபதி Admiral of the fleet வசந்த கரன்னாகொடவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப்பத்திரத்தை நீக்கிக்கொள்வதற்கு சட்டமா அதிபரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை கொழும்பு மூவரடங்கிய விசேட மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் இன்று நிராகரித்துள்ளது.

பிரதிவாதிக்கு எதிரான குற்றப்பத்திரத்தை தொடர்ந்தும் விசாரணை செய்யவோ அல்லது அதனை முன்னெடுத்துச் செல்வதற்கோ முடியாது என சட்ட மா அதிபர் தீர்மானித்துள்ளமையால் , குற்றப்பத்திரத்தை தொடர்ந்தும் முன்னெடுத்து செல்லாதிருப்பதற்கான அனுமதியை வழங்குமாறு சட்ட மா அதிபர் சார்பில் மன்றில் ஆஜராகிய அரச சிரேஷ்ட சட்டத்தரணி லொஹான் அபேவிக்ரம கோரிக்கை விடுத்துள்ளார்.

விசேட மூவரடங்கிய மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குடன் தொடர்புடைய பிரதிவாதி ஒருவருக்கு எதிரான குற்றப்பத்திரத்தை நீக்கிக்கொள்வதாயின், சட்டமா அதிபர் நீதிமன்றத்தில் முன்னிலையாகி அவரின் கையொப்பத்துடன் எழுத்து மூலம் கோரிக்கை விடுக்க வேண்டும் என நீதிபதிகள் குழாம் அறிவித்துள்ளது.

வாய்மொழி மூல கோரிக்கைக்கு தமது நீதிமன்றத்தால் அனுமதி வழங்க முடியாது என அறிவித்த நீதிபதிகள் , சட்டமா அதிபரின் கோரிக்கையை நிராகரித்துள்ளனர்.

11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் 14 ஆவது பிரதிவாதியாக முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட பெயர் குறிப்பிடப்பட்டுள்ளார்.

குற்றப்பத்திரத்தை திருத்தி, வழக்கின் ஏனைய 13 பிரதிவாதிகளுக்கும் எதிராக தொடர்ந்தும் வழக்கு விசாரணையை முன்னெடுக்க சட்டமா அதிபர் தீர்மானித்துள்ளதாகவும் இன்றைய தினம் அரச சிரேஷ்ட சட்டத்தரணி மன்றுக்கு அறிவித்துள்ளார்.

இந்த வழக்கை டிசம்பர் 03 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள சம்பா ஜானகி ராஜரத்ன, அமல் ரணராஜா மற்றும் நவரத்ன மாரசிங்க ஆகிய நீதிபதிகள் குழாம் உத்தரவிட்டுள்ளது.