சந்தர்ப்பத்தை சாதுரியமாக பயன்படுத்த வேண்டியது எமது கடமை: தர்மலிங்கம் சித்தார்தன்

அரசாங்கம் தற்போது பலவீனப்பட்டுக் காணப்படும் நிலையில் தமிழ் மக்களாகிய நாங்கள் பலப்பட்டுக் காணப்படுகிறோம், இவ்வாறானதொரு சந்தர்ப்பத்தில் ஜனாதிபதி பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளமையை சாதுரியமாகப் பயன்படுத்த வேண்டியது எமது கடமை என புளொட் அமைப்பின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமாகிய தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஆட்சிக்கு வந்து மூன்று வருடங்களை எட்டிவிட்ட நிலையில் தனக்கும் தன்னுடைய அரசாங்கத்துக்கும் சர்வதேச ரீதியாகவும் உள்ளூர் முறையிலும் ஏற்பட்டிருக்கும் நெருக்கடியைச் சமாளிக்கவும் சர்வதேசத்தை ஏமாற்றவும் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பை திடீரென பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளார். இந்த சந்திப்பைத் தமிழ் தரப்பினர் பலர் விரும்பவில்லை. இது தொடர்பில் தங்கள் கருத்து என்ன? என வினவியபோதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,

ஜனாதிபதி தானாக எங்களைப் பேச்சுவார்த்தைக்கு அழைக்கவில்லை. சர்வதேசம் தொடர்ந்து கொடுத்துவரும் அழுத்தம், மனித உரிமை பேரவையின் மறைமுகமான அழுத்தங்கள், அறிக்கைகள் மற்றும் இந்தியத் தரப்பினரின் வலியுறுத்தல் காரணமாகவும் தற்போது நாட்டில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார மற்றும் ஆட்சி நெருக்கடி காரணமாகவே அதைச் சமநிலைப்படுத்த ஜனாதிபதி கூட்டமைப்பைப் பேச்சு வார்த்தைக்கு அழைத்துள்ளார்.

இது தவிர கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாகப் பதவியேற்ற காலத்திலிருந்து சந்திப்பதற்கான நேரத்தை ஒதுக்கித்தரும்படி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கடிதம் மூலம் கோரிக்கை விட்டிருந்தார்.

அதுவுமன்றி அண்மையில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் இணைந்து ஜனாதிபதி மாளிகை முன்பாக காணி அபகரிப்புக்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்று செய்திருந்தோம். அவ்வேளையிலும் ஜனாதிபதியைச் சந்திக்கும் முயற்சியை மேற்கொண்டோம்.

இவ்வாறான சூழ்நிலைகளே கூட்டமைப்பை ஜனாதிபதி பேச்சுக்கு அழைக்கக் காரணங்களாகும். மிக நீண்டகாலத்துக்குப் பின்பு இந்தியா – இலங்கை அரசாங்கத்துக்கு ஒரு ஆலோசனையை முன்வைத்திருந்தது. அது மிகவும் முக்கியம் வாய்ந்ததாகும்.

13ஆவது திருத்தத்துக்கு அப்பால் சென்று இலங்கை தமிழ் மக்களுடைய நீண்ட காலப் பிரச்சினைக்குத் தீர்வு காணுங்கள். அதுவே பிரச்சனையைத் தீர்ப்பதற்கான ஒரே வழி என்பதை எடுத்துக் கூறியுள்ளனர்.

ஐக்கிய நாடுகள் சபையின் எந்த தீர்மானத்தையும் நிறைவேற்றமாட்டேன் என்று ஜனாதிபதி பிடிவாதம் பிடித்துவருகிறார். இது சர்வதேச ரீதியாக எமக்கு சாதகமாகவுள்ளது. நாட்டினுடைய இன்றைய பொருளாதார அரசியல் நெருக்கடிகள் எமக்கு சாதகமாகவுள்ளது.

ஜனாதிபதி எப்போது பலவீனப்பட்டுக் காணப்படுகிறாரோ அப்போதுதான் நாம் அவருடன் பேசமுடியும். அவர் தற்போது சகல வகையிலும் பலவீனப்பட்டுக் காணப்படுகிறார்.

குறிப்பாகப் பொருளாதார நெருக்கடிகளுடன் சேர்ந்து ஆட்சியின் உள்ளக நெருக்கடிகள் அவரை கதிகலங்க வைத்துள்ளது. நாம் இப்போது பலப்பட்டு நிற்கின்றோம், அவர் பலவீனப்பட்டு நிற்கின்றார்.

இந்த சந்தர்ப்பத்தை நாம் சரியாகப் பயன்படுத்தவேண்டும். சர்வதேசமும், மறைமுகமாக மனிதவுரிமை பேரவையும், இந்தியாவும் தமிழ் மக்களுடன் பேசி பிரச்சனைக்குத் தீர்வுகாணுங்கள் என்று அழுத்தங்களைப் பிரயோகத்து வருகிற நிலையில், நாம் ஜனாதிபதியுடன் பேசவில்லையாயின் அவர்கள் கொடுத்த அழுத்தத்துக்கு அர்த்தம் இல்லாமல் போய்விடும்.

எனவேதான் பேசவேண்டுமென்ற முடிவை எடுத்திருக்கிறோம். எது எவ்வாறு இருந்தபோதும் தமிழ் மக்களுடைய பிரச்சனைக்குத் தீர்வு காணப்படவேண்டுமாயின் ஜனாதிபதியுடன் பேச வேண்டியது அவசியமானது. மக்களில் பலரும் சில தமிழ்க்கட்சிகளின் தலைவர்களும் இப்பேச்சுவார்த்தையை விரும்பவில்லை விசனத்தைத் தெரிவித்து வருகிறார்கள் என்பதை ஏற்றுக்கொள்கிறேன்.

மக்களின் கருத்தில் நியாயம் இருக்கிறதென்பது உண்மையே. காரணம் தமிழ் மக்களின் பிரச்சனையைத் தீர்ப்பதில் ஜனாதிபதியோ அவருடைய அரசாங்கமோ ஆர்வம் காட்டவில்லை, உதாசீனம் செய்துவருகிறதென்பது உண்மையே.

இருந்தபோதிலும் தற்போது கூட்டமைப்பை ஜனாதிபதி பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளார் என்ற நிலையில் நாம் அதை புறக்கணிப்பது பொருத்தமான விடயமல்ல. அவருடன் பேசினால் மட்டுமே அவர் தமிழ் மக்களுக்கான தீர்வு தொடர்பில் என்ன நிலைப்பாட்டைக் கொண்டிருக்கிறார் என்பதைத் தெரிந்து கொண்டு கூட்டமைப்பு தனது அடுத்த நிகழ்ச்சி நிரலைத் தயாரிக்க முடியும்.

அண்மையில் இந்தியா சென்று நிரம்பியுள்ள இலங்கையின் வெளி விவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் ஒரு செய்தியை வெளியிட்டிருந்தார். ஜனாதிபதிக்கும் கூட்டமைப்புக்கு இடையிலான பேச்சு தமிழ் மக்களின் நீண்ட காலப்பிரச்சனைக்கு அரசியல் தீர்வு தொடர்பாக இருக்கும்.

எனவே எமது பிரச்சனையை நாமே பேசித்தீர்ப்போம் என்ற வழி முறைக்கு அரசாங்கம் வந்திருக்கிறதென்ற சமிஞ்சையை காட்டியுள்ளார். எனவே வாய்ப்பை பயன்படுத்திப் பார்ப்போம் என குறிப்பிட்டுள்ளார்.