சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் தங்கம் வென்ற முல்லைத்தீவு யுவதிக்கு அரசு எந்தவித உதவிகளையும் வழங்கவில்லை – வினோ எம்பி!

பாகிஸ்தானில் இடம்பெற்ற சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் பங்குகொண்ட முல்லைத்தீவு யுவதியான கணேஷ் இந்துகாதேவி தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளமைக்கு தமிழ் தேசியக்கூட்டமைப்பு பாராளுமன்றத்தில் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்ததுடன் அவருக்கு அரசு எந்தவித உதவிகளையும் வழங்காமை தொடர்பில் கவலையும் வெளியிட்டது.

பாராளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஜனாதிபதியின் கொள்கை விளக்கவுரை மீதான இரண்டாம் நாள் சபை ஒத்திவைப்புவேளை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைமை குழு உறுப்பினரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வினோ நோகராதலிங்கம் தமிழ் தேசியக்கூட்டமைப்பு சார்பில் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொண்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் பேசுகையில், முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கரிப்பட்டமுறிப்பு புதியநகர் கிராமத்தில் தந்தையை இழந்த நிலையில் தாயின் அரவணைப்பில் குத்துச் சண்டையில் சாதித்து வரும் கணேஷ் இந்துகாதேவி பாகிஸ்தானில் இடம் பெற்ற சர்வதேச போட்டியில் தங்கப்பதக்கம் வென்று நாட்டுக்கும் தமிழினத்துக்கும் பெருமை சேர்த்துள்ளார்.

கணேஷ் இந்துகாதேவி மிகவும் வறுமையான குடும்பத்தை சேர்ந்தவர்.அரசு அவருக்கு பயண அனுமதியை வழங்கியதே தவிர வேறு எந்த உதவிகளையும் வழங்கவில்லை .அவரின் பாகிஸ்தான் பயணத்துக்கு எமது பொது அமைப்புக்களே நிதி உதவி செய்தன.இவ்வாறான நிலையில் தான் அவர் தங்கம் வென்று நாட்டுக்கும் வன்னி மண்ணுக்கும் தமிழினத்துக்கு பெருமை சேர்த்துள்ளார். இவரைப்போன்ற எத்தனையோ திறமையான, நாட்டுக்கு பெருமை தேடித்தரக்கூடிய வீர,வீராங்கனைகள் வடக்கு,கிழக்கில் உள்ளனர். அவர்களுக்கு அரசு வாய்ப்புக்களையும் வசதிகளையும் வழங்க வேண்டும் என்றார்.