”சர்வதேச நாடுகள் தமிழர்களை ஏமாற்றுகின்றன” – பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன்

சர்வதேச நாடுகள் இலங்கையை தமது கட்டுப்பாட்டுக்குள் வைப்பதற்கு தமிழர்களின் விடையங்களை பயன்படுத்துகின்றன என்று மிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.

இதன்படி அமெரிக்கா போன்ற நாடுகள் இலங்கையை பகடக்காயாக பயன்படுத்துகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.

மன்னாரில் நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், மனித உரிமை உதவி ஆணையாளர் இலங்கை தொடர்பான பரிந்துரைகளை முன் வைத்துள்ளார்.

வடக்கு கிழக்கில் தொடர்ச்சியாக தமிழ் மக்கள் இலங்கை அரசாங்கத்தினால் நீண்ட காலமாக துன்புறுத்தப்பட்டு, கடைசியாக 2009 ஆம் ஆண்டு, தமிழ் இனத்தை இனப் படுகொலையாக அழித்த சம்பவங்கள் தொடர்ச்சியாக சர்வதேச நாடுகள் ஊடாக ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், இலங்கை தமிழ் மக்களுக்கு ஒரு தீர்வு வரும் என்று நம்புகின்றார்கள்.

ஆனால் சர்வதேச நாடுகளை பொருத்தவரையில், இலங்கையை தமது கட்டுப்பாட்டுக்குள் வைப்பதற்காக தமிழர்களின் விடையங்களை பயன்படுத்தி, அமெரிக்கா போன்ற நாடுகள், இலங்கையை தமது கட்டுப்பாட்டின் கீழ் வைப்பதற்கு பகடக்காயாக பயன்படுத்துவதாக நான் பார்க்கின்றேன்.

சர்வதேச விசாரணை வேண்டும் என்று தொடர்ச்சியாக தாயகம் புலத்தில் இருக்கின்ற சகல தரப்பினரும் ஒன்றிணைந்து ஒருமித்து கோரிக்கை முன் வைத்த போதும், ஐ.நா மனித உரிமைகள் பேரவையை கையாளுகின்ற நாடுகள் ஒரு மென் போக்கை கடைபிடித்து வருகிறது.

தற்போது வந்துள்ள பரிந்துரையில் பல விடையங்கள் இருந்தாலும்,தீர்மானம் ஒன்று நிறைவேறும் போது, பிரேரணை எந்த வித பயனும் இல்லாத ஒன்றாக காணப்படும்.

இலங்கை அரசாங்கம் ஐ.நாவில் எப்படியான தீர்மானங்களை நிறைவேற்றினாலும், இலங்கை அரசாங்கம் இவ்வளவு காலமும், ஐ.நா பரிந்துரைகளுக்கும்,தீர்மானங்களையும் நிறைவேற்ற எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை. தற்போதைய பரிந்துரையின் போது அமைச்சர் அலி சப்ரி தாங்கள் அதற்கு உடன் பட மாட்டோம் என்று கூறியிருக்கிறார்.

தொடர்ச்சியாக தமிழ் மக்கள் ஏமாற்றப்படுகின்ற ஒரு சூழ்நிலையும், மேற்குலக நாடுகளும் தமிழர் தரப்பை தொடர்ச்சியாக ஏமாற்றுகின்ற சூழ்நிலை தான் தொடர்ச்சியாக காணப்படுகின்றது என அவர் மேலும் தெரிவித்தார்.