மாணவர் அமைப்புக்களின் தலைவர்கள், தொழிற்சங்கத்தலைவர்கள், ஆசிரியர்கள், கல்வித்துறைசார் நிபுணர்கள் மற்றும் நாட்டில் நடைமுறையிலுள்ள கல்விசார் கொள்கைகளுக்கு எதிராக அண்மையில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டங்களில் கலந்துகொண்டவர்களை பழிவாங்கும் வகையில் ஸ்ரீலங்கா அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகளை வன்மையாகக் கண்டிப்பதாக 09 அமைப்புகள் தெரிவித்துள்ளன.
சர்வதேச மன்னிப்புச்சபை, மனித உரிமைகள் மற்றும் அபிவிருத்திக்கான ஆசியப்பேரவை, ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு, மனித உரிமைகளுக்கான சர்வதேச கூட்டமைப்பு, முன்னரங்க செயற்பாட்டாளர்கள், மனித உரிமைகள் கண்காணிப்பகம், மனித உரிமைகளுக்கான தெற்காசியர்கள், அமைதி மற்றும் நீதிக்கான இலங்கையின் பிரசாரம், சித்திரவதைகளுக்கு எதிரான பூகோள அமைப்பு ஆகிய 9 அமைப்புக்கள் இணைந்து வெளியிட்ட கூட்டு அறிக்கையிலேயே இந்த கண்டனம் வெளியிடப்பட்டுள்ளது.
ஆர்ப்பாட்டங்கள், கருத்துச்சுதந்திரத்திற்கான உரிமை, அமைதிவழியிலான ஒன்றுகூடல்கள் ஆகியவற்றுக்கு தன்னிச்சையான கைது நடவடிக்கைகள், அடக்குமுறைகள் மற்றும் மாணவர்கள், ஆசிரியர்கள், தொழிற்சங்கவாதிகளின் பணிகளுக்குக் களங்கத்தை ஏற்படுத்தக்கூடியவகையில் திட்டமிட்டுப் பரப்பப்பட்ட போலித்தகவல்கள் ஆகியவற்றையே ஸ்ரீலங்கா அரசாங்கம் பதிலாக வழங்கியிருக்கின்றது.
கல்வி உரிமையை வலியுறுத்தி முன்னெடுக்கப்படும் போராட்டங்களில் கலந்துகொண்ட மற்றும் ஆதரவை வழங்கிய மேலும் செயற்பாட்டாளர்கள் கைது செய்யப்படுவதற்கான அச்சுறுத்தலையும் அடக்குமுறைகளையும் எதிர்கொண்டிருப்பதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.
மனித உரிமைகள் பாதுகாவலர்கள் மற்றும் கல்வி உரிமைக்காகப் போராடும் செயற்பாட்டாளர்கள் மீதான பழிவாங்கல்கள் மற்றும் அடக்குமுறைகள் உடனடியாக முடிவிற்குக்கொண்டுவரப்படவேண்டும் என்று வலியுறுத்துவதாக அதில் கூறப்பட்டுள்ளது. அத்தோடு தற்போது சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் செயற்பாட்டாளர்களின் உடலியல் மற்றும் உளவியல் நலனைக் கருத்திற்கொண்டு அவர்களை உடனடியாக விடுதலை செய்யுமாறு ஸ்ரீலங்கா அரசாங்கத்தைக் கோருவதாகவும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும் பொது வெளியில் ஆர்ப்பாட்டங்களில் கலந்துகொள்வது உள்ளடங்கலாக அமைதியான முறையில் ஒன்றுகூடல் மற்றும் கருத்துக்களை வெளிப்படுத்தல் ஆகியவற்றுக்கான சுதந்திரத்திற்கு மதிப்பளிக்கப்படவேண்டுமென 9 அமைப்புக்களின் அந்தக் கூட்டறிக்கையில் மேலும் வலியுறுத்தப்பட்டுள்ளது.