சிறிலங்காவிற்கு கிடைக்கும் ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகையை தக்கவைத்துக்கொள்வதற்காக நடைமுறைப்படுத்த வேண்டிய 27 சர்வதேச கடைப்பிடிப்புகள் தொடர்பில் மீளாய்வு செய்வதற்காக நாட்டிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஐரோப்பிய ஒன்றிய சிரேஷ்ட அதிகாரிகள் குழு தனது விஜயத்தை நிறைவு செய்துள்ளது.
ஐந்து பேர் கொண்ட குறித்த குழு 2021 செப்டெம்பர் 27ஆம் திகதி சிறிலங்காவிற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு, 10 நாட்கள் தங்கியிருந்த இந்தக்குழு, அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச, வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸ், நீதி அமைச்சர் அலி சப்ரி மற்றும், நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச போன்ற அரசாங்க பிரதிநிதிகளுடன் சந்திப்புகளை மேற்கொண்டிருந்தது.
எதிர்கக்ட்சி, சிவில் சமூக அமைப்புக்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள், தொழிற்சங்கங்கள் மற்றும் தொழில் வழங்குநர்களுடனும் இந்த அதிகாரிகள் சந்திப்புக்களை முன்னெத்தனர்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் அங்கத்துவ நாடுகளின் தூதுவர்கள் மற்றும் ஐக்கிய நாடுகள் முகவர் அமைப்புக்களின் பிரதான அதிகாரிகளுடனும் இந்தக் குழு சந்திப்புக்களை மேற்கொண்டிருந்தது.
மனித உரிமைகள் மற்றும் சட்டவிதிமுறை, பொருளாதார, சமூக மற்றும் கலாசார உரிமைகள் மற்றும் தொழிலாளர் உறவுகள் போன்றவற்றில் தாக்கம் செலுத்தியிருந்த விடயங்கள் தொடர்பில் கண்காணிப்பு குழு கவனம் செலுத்தியிருந்தது.
பயங்கரவாத தடைச் சட்டம் தொடர்பிலும் அதிகாரிகள் கலந்துரையாடியிருந்ததுடன், 2017ஆம் ஆண்டு ஜிஎஸ்பி பிளஸ் திட்டத்தில் சிறிலங்காவை மீள உள்வாங்கிய போது பயங்கரவாத தடைச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வது என்பது பிரதான உறுதியளிப்பாக அமைந்திருந்தது.
தற்போது பயங்கரவாத தடைச் சட்டம் தொடர்பில் நிலவும் பிரச்சினைகள் தொடர்பிலும் ஐரோப்பிய ஒன்றிய கண்காணிப்புக்குழு கேட்டறிந்ததுடன், அடிப்படை சுதந்திரங்களை அனுபவிப்பதற்கு காணப்படும் கட்டுப்பாடுகள் மற்றும் அரசார்பற்ற நிறுவனங்களுக்கு புதிய சட்டவரைபு தயாராகின்றமை தொடர்பிலும் கவனம் செலுத்தியிருந்தது.
நாட்டில் உள்ள சகல சமூகங்களின் உரிமைகளுக்கும் மதிப்பளிப்பது மற்றும் பாகுபாடின்றிய செயற்பாடுகள் தொடர்பிலும், இந்த விடயம் தொடர்பில் அரசியல் அமைப்பு திருத்தம் தொடர்பிலும் அதிகளவு கவனம் செலுத்தப்பட்டிருந்தது.
போதைப்பொருள் கொள்கை, சூழல் மற்றும் காலநிலை மாற்றம் தொடர்பிலும் இந்த சந்திப்புக்களின் போது மீளாய்வு செய்யப்பட்டிருந்ததுடன், ஊழல் மோசடிபற்றியும் ஆரயப்பட்டிருந்ததாக ஐரோப்பிய ஒன்றிய சிறிலங்கா அலுவலகம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.