ஜனாதிபதி ரணில் யாழ் விஜயம் ; பல்கலைக்கழக மருத்துவ பீட புதிய கட்டிடம் திறந்து வைப்பு

யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் 46 வருடங்களில் முதன்முறையாக 942 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட மருத்துவப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சித் தொகுதியை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (24) திறந்து வைத்தார்.

யாழ் வைத்தியசாலை விரைவில் தேசிய வைத்தியசாலையாக தரமுயர்த்தப்படும் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

இதன்மூலம் வடக்கில் சிறந்த சுகாதார கட்டமைப்பை உறுதிப்படுத்த முடியும் என யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீடத்திற்கான மருத்துவப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சிக் கட்டிடத்தை இன்று (24) திறந்து வைத்து உரையாற்றிய ஜனாதிபதி தெரிவித்தார்.

வடக்கு மாகாணத்திற்கான மூன்று நாள் விஜயத்திற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று காலை யாழ்ப்பாணத்தை வந்தடைந்தார்.

உலங்கு வானூர்தி மூலம் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் வந்திறங்கிய ஜனாதிபதியை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் ஆகியோர் வரவேற்றனர்.

இந்நிலையில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீட கட்டிடத்தை திறந்துவைத்துள்ளதுடன், துரையப்பா விளையாட்டரங்கில் நடைபெறும் இளைஞர் சேவை மன்ற நிகழ்வு, தந்தை செல்வா கலையரங்கில் நடைபெறும் ஆசிரியர் நியமன நிகழ்விலும் கலந்துகொள்கிறார்.