ஜெனீவா அமர்வில் பங்கேற்போரிடம் விசாரணை நடத்தும் இலங்கை போலீஸ்

இலங்கையில் யுத்தம் நடந்த காலத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரை தேடி, அவர்களின் உறவினர்கள் முன்னெடுத்து வரும் போராட்டத்தில் பங்கெடுப்போரிடம் பயங்கரவாத தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவது தெரிய வந்துள்ளது.

குறிப்பாக 2017ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 20ஆம் தேதி முதல் தொடர்ச்சியாக வடக்கு, கிழக்கு பகுதிகளில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், சூழற்சி முறையிலான இந்த போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்த போராட்டம் தொடங்கப்பட்டு, இன்றுடன் 1,468 நாட்கள் கடந்துள்ளது. இவ்வாறான நிலையில், ஜெனீவாவில் மனித உரிமை பேரவையின் இந்த ஆண்டுக்கான கூட்டத் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது.

உலகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காணப்படும் நிலையிலேயே, ஜெனீவா அமர்வு நடத்தப்பட்டு வருகிறது.

முந்தைய ஆண்டுகளைப் போலவே இம்முறையும் இலங்கை யுத்த விவகாரம், ஜெனீவா அமர்வில் முக்கிய விவாதமாகியிருக்கிறது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, இந்த அமர்வில் பங்கேற்பதற்காக இலங்கை மத்திய அரசாங்க தரப்போ தமிழர் தரப்போ இம்முறை செல்லவில்லை. எனினும், காணொளி காட்சி வழியாக ஜெனீவா அமர்வுகளில் இந்த இரண்டு தரப்பினரும் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த நிலையில், ஜெனீவா மனித உரிமை பேரவை கூட்டத் தொடரில் தமது குரலை மௌனிக்க செய்வதற்கு இலங்கை அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகளின் சங்கத்தின் செயலாளர் லீலாதேசி ஆனந்த நடராஜா தெரிவித்தார்.

இதன் ஒரு கட்டமாக தான் பயங்கரவாதத் தடுப்பு பிரிவினரால் புதன்கிழமை (பிப்ரவரி 24) முதல் முறையாக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

கிளிநொச்சி பயங்கரவாதத் தடுப்பு பிரிவின் அலுவலகத்தில் வைத்து, கொழும்பு பயங்கரவாதத் தடுப்பு பிரிவு அலுவலக அதிகாரிகளால் தான் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாகவும் அவர் கூறினார்.

தனது வங்கிக் கணக்கு விவரங்கள், போராட்டங்கள் நடத்தப்படுவதற்கான காரணங்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

அத்துடன், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை ஊக்குவிப்பதற்கான செயற்பாடுகளை முன்னெடுக்கின்றீர்களா என்ற கோணத்திலும் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் தன்னிடம் விசாரணை நடத்தியதாக அவர் கூறினார்.

தன்னைப்பற்றிய அனைத்து தகவல்களையும் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் வைத்திருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார். வெளிநாடுகளில் இருந்து தனது வங்கிக் கணக்குக்கு வரும் பணம் தொடர்பிலும் தன்னிடம் விசாரணை நடத்தப்பட்டதாக கூறிய அவர், அந்த பணம், பிரித்தானியாவிலுள்ள தனது மகனால் அனுப்பப்படும் பணம் என தான் பதிலளித்ததாகவும் லீலாதேசி ஆனந்த நடராஜா தெரிவித்தார்.

போராட்டம் நடத்துவதற்கு வெளிநாடுகளிலிருந்து பணம் கிடைக்கிறதா என பயங்கரவாதத் தடுப்பு பிரிவினர் வினவியதற்கு, தான் “இல்லை” என பதிலளித்ததாகவும் அவர் கூறினார்.

இலங்கை ராணுவத்திற்கு எதிராக முறைப்பாடுகளை செய்தீர்களா என தன்னிடம் ஒரு அதிகாரி விசாரணை செய்ததாக அவர் குறிப்பிட்டார்.

தான் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ராணுவத்திற்கு எதிராக முறைப்பாடு செய்யவில்லை எனவும், அரசாங்கத்தின் மீதே தாம் கோபம் கொண்டுள்ளதாகவும் லீலாதேசி ஆனந்த நடராஜா தெரிவித்தார்.

இதேவேளை, 2010ஆம் ஆண்டில் ஜெனீவா அமர்வுகளில் கலந்து கொண்டீர்களா என பயங்கரவாத தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் தன்னிடம் கேட்டதற்கு, 2010ஆம் ஆண்டில் நடந்த ஜெனீவா அமர்வுகளுக்கு செல்லவில்லை எனவும், 2018ம் ஆண்டு ஜெனீவா அமர்வுகளிலேயே தான் முதல் முறையாக கலந்து கொண்டதாகவும் அதிகாரிகளிடம் தெரிவித்ததாக லீலாதேசி ஆனந்த நடராஜா கூறினார்.

ஜெனீவா அமர்வில் முன்வைக்கப்படும் விஷயங்கள் குறித்தும் அவரிடம் அதிகாரிகள் கேட்டுள்ளதாக தெரிகிறது. காணாமல் ஆக்கப்பட்ட தமது பிள்ளைகளை கண்டுபிடித்து தருவதற்கு இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தங்களை கொடுக்கவே இதுபோன்ற போராட்டங்களை தமது சங்கத்தில் உள்ளவர்கள் மேற்கொள்வதாக லீலாதேசி கூறினார்.

தற்போது நடைபெற்று வரும் ஜெனீவா அமர்வுகளில் தான் கலந்து கொள்ளாதிருப்பதற்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தலாகவே அதிகாரிகளின் விசாரணையை நடவடிக்கையை கருதுவதாக லீலாதேசி ஆனந்த நடராஜா மேலும் தெரிவித்தார்.