தனிப் பெரும்பான்மையுடன் திமுக ஆட்சி: முதல்வராகிறார் ஸ்டாலின்

தமிழகத்தின் 234 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்குமான சட்டமன்றப் பொதுத்தேர்தல் கடந்த ஏப்ரல்-06 ஆம் திகதி ஒரே கட்டமாக இடம்பெற்றது. வாக்குப்பதிவு நிறைவடைந்து 26 நாட்கள் ஆன நிலையில், இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. பெரும்பான்மையான தொகுதிகளில் தி.மு.க மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்கள் அதிக வாக்குகளுடன் முன்னணியில் உள்ளனர்.

சற்றுமுன் நிலவரப்படி, திமுக கூட்டணி 160 இடங்களிலும், அதிமுக கூட்டணி 74 இடங்களிலும் வெற்றிபெற்றுள்ளது.

தி.மு.க கூட்டணி வேட்பாளர்களின் மகத்தான வெற்றியைத் தொடர்ந்து அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கவிருக்கிறார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின். இதனால், மு.க.ஸ்டாலின் முதன்முறையாக முதல்வராகப் பதவியேற்கவிருக்கிறார்.

பத்து ஆண்டுகளுக்குப் பின் தமிழகத்தில் திமுக ஆட்சி அமையவுள்ளமையால் அக் கட்சியைச் சேர்ந்த தொண்டர்கள் மத்தியில் உற்சாகம் கரைபுரளத் தொடங்கியுள்ளது. அண்ணா அறிவாயத்தில் கூடிய அக்கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகளும், தொண்டர்களும் இனிப்புக்கள் பரிமாறியும், பட்டாசுகள் கொளுத்தியும், நடனமாடியும் தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இதேவேளை, முதன்முறையாக முதல்வர் இருக்கையில் அமரப் போகும் ஸ்டாலினுக்கு தேசியத் தலைவர்கள், மாநிலத் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.