தமிழகத்தில் வாழும் இலங்கை தமிழ் அகதிகளுக்கு குடியுரிமை வழங்க வலியுறுத்தி எதிர்வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என சிறுபான்மையினர் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் கே எஸ் மஸ்தான் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அமைச்சர் கே எஸ் மஸ்தான் தெரிவித்ததாவது,
‘ தமிழகத்தில் உள்ள 108 அகதி முகாம்களில், 106 முகாம்களில் இலங்கைத் தமிழர்கள் வாழ்கின்றனர். இவர்களுக்கான அடிப்படை வசதிகள் கிடைக்கப் பெற்றார்களா..? என அண்மையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதன்போது அவர்களின் கோரிக்கைகளை ஏற்று, இவர்களுக்கு கொரோனா நிவாரண நிதியாக 5.42 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
இவர்களுக்கு குடியுரிமை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வர் மு க ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடியிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
கடந்த சட்டப்பேரவை கூட்டத் தொடரின் ஆளுநர் உரையில்,’ இலங்கை தமிழ் அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை வழங்க தேவையான சட்டங்களும், திருத்தங்களும் மேற்கொள்ள மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்தும்’ என கூறப்பட்டுள்ளது.
இலங்கை தமிழர்கள் முகாமை விட்டு வெளியே சென்று வீடு திரும்புவதற்காக உள்ள கட்டுப்பாடுகளை தளர்த்தி, அவர்களுக்கு கால அவகாசம் வழங்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. அவர்களுக்கு குடியுரிமை வழங்குவது குறித்து வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் தீர்மானம் நிறைவேற்றப்படும்’ என்றார்.