இந்த நாட்டின் மூவின மக்களும் ஒற்றுமையாக இருந்தால் தான் இந்த நாடு செழிப்பாகும். அவ்வாறான ஒற்றுமை வெறுமனே வாயளவில் இல்லாமல் செயற்பாட்டில் உருவாக்கப்பட வேண்டும். தமிழர்களின் தீர்வு விடயத்தில் சிங்கள இளைஞர்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இதற்கான முன்னெடுப்புகள் சிங்கள இளைஞர்கள் மத்தியிலிருந்தும் உருவெடுத்தால் இந்த நாடு மீட்சி பெறும் என முன்னாள் கிழக்கு மாகாணசபை பிரதித் தவிசாளரும், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் பிரதித் தலைவருமான பிரசன்னா இந்திரகுமார் தெரிவித்தார்.
இன்றைய தினம் மட்டக்களப்பில் இடம்பெற்ற தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் முன்னாள் தலைவர் ஸ்ரீசபாரெத்தினத்தின் 36வது வீரவணக்க நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
இன்று எமது தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் முன்னாள் தலைவர் ஸ்ரீ சபாரெத்தினம் அவர்களின் 36வது ஆண்டு நினவினை எமது மட்டக்களப்பு காரியாலயத்தில் மேற்கொண்டுள்ளோம். 1986ம் ஆண்டு மே மாதம் 06ம் திகதி யாழ்ப்பாணம் அன்னங்கை என்ற இடத்தில் வைத்து எமது தலைவர் சகோதரப் படுகொலை செய்யப்பட்ட நாள்.
நாங்கள் எமது தலைவரின் பாசறையில் வளர்ந்தவர்கள். இன்றும் அவர் கொள்கைகள் மாறாவண்ணம் எமது மக்களுக்கான செயற்பாடுகளை முன்னெடுத்துக் கொண்டிருக்கின்றோம். இன்றைய நாட்டின் சூழ்நிலை காரணமாக இன்று தொழிற்சங்கங்கள் இணைந்து ஹர்த்தாhல் அனுஸ்டிக்கும் தினமாகையால் எமது இந்த நிகழ்வினை குறிப்பிட்ட உறுப்பினர்களின் பங்களிப்புடன் மேற்கொண்டுள்ளோம்.
இந்த நாடு இவ்வளவு மோசமான நிலைக்குச் சென்றதற்கு இந்த நாட்டை மாறி மாறி ஆண்டு வந்த இனவாதத் தலைவர்களே காரணம். தமிழர்களுக்கெதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டதன் காரணமாக போரும் அதன் பின்னரான பொருளாதாரச் சீரழிவுகளும் இடம்பெற்று தற்போது இந்நிலையில் வந்திருக்கின்றது. இன்று இந்த நாடு உலகலாவிய ரீதியில் வறுமைக் கோட்டின் கிழுள்ள நாடுகளின் வரிசையில் முன்னிலையில் இருக்கின்றது.
தமிழர்கள் தங்கள் உரிமைகளை முன்நிறுத்தி தங்கள் போராட்டத்தை எங்கு ஆரம்பித்தார்களோ அதே காலி முகத்திடலிலே இன்று சிங்கள மக்கள் நாட்டின் பொருளாதார பிரச்சனைகளை முன்நிறுத்திப் போராடிக் கொண்டிருக்கின்றார்கள். இன்று இந்த அரசாங்கத்திற்கு எதிராக பொருளாதாரப் பிரச்சனைகளைச் சுட்டிக் காட்டிப் போராடும் சிங்கள மக்கள் தமிழர்களின் உரிமைப் பிரச்சனை தொடர்பிலும் அக்கறை கொள்ள வேண்டும். அதன் வரலாறுகளை அறிந்து ஏற்பட்ட தவறுகளைத் திருத்தவும் முன்வர வேண்டும்.
புழர்ழஅநபுழவவய போராட்டம் நடைபெறுகின்ற பழைய நாடாளுமன்ற கட்டிடம் அதாவது தற்போதைய ஜனாதிபதி செயலகம் முன்பாகவுள்ள காலி முகத்திடலில் தான் தமிழ் மக்களின் உரிமை போராட்டமும் தமிழர்களுக்கு எதிரான வன்முறை வடிவிலான அடக்கு முறையும் அத்திவாரமிடப்பட்டது.
சுதந்திரத்திற்கு பின் காலி முகத்திடல் பல போராட்ட வரலாறுகளை கொண்டிருந்தாலும் முதலாவது போராட்டமாக 1956 தமிழர்களின் சத்தியாகிரக போராட்டம் தான் பதிவாகியுள்ளது. அந்த பூமியில் தான் தமிழர்களுக்கு எதிரான அடக்கு முறையிலான வன்முறைகளுக்கும் அடித்தளம் இடப்பட்டது.
தமிழர்களின் உரிமை போராட்டத்தில் முதல் ரத்தம் சிந்திய பூமி காலி முகத்திடல். இலங்கை நாடாளுமன்றத்தில் 1956 யூன் 05 தனிச் சிங்கள சட்டம் கொண்டு வரப்பட்டது. தமிழ் மொழி தேசிய மொழி அந்தஸ்த்தை இழந்;தது. சிங்கள மொழியில் பணிபுரிய முடியாத தமிழ் அரச ஊழியர்கள் பணி இழக்க நேரிட்டது. இச்சட்டதிற்கு எதிராக தமிழரசுக் கட்சி தலைமையில் தமிழர்கள் சத்தியாகிரகப் போராடத்தை முன்னெடுத்தனர். தனிச் சிங்கள சட்டம் கொண்டு வரப்பட்ட 1956 யூன் 05ல் தற்போதைய ஜனாதிபதி செயலகமாக இருக்கின்ற அப்போதைய நாடாளுமன்றுக்கு முன்னாலுள்ள காலி முகத்திடலில் ஆயிரகணக்கில் தமிழர்கள் அணி திரண்டனர்.
தந்தை செல்வாவும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களும் மக்களோடு மக்களாக சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆயுதம் தங்கிய இராணுவத்தினரும் காவல்துறையினரும் அங்கு காணப்பட்டனர். அன்றைய பிரதமர் பண்டாரநாயக்க உட்பட மற்றைய சிங்கள நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்ற மேல்மாடியில் இருந்து போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த மக்களைப் பார்த்தனர். அமைச்சரான கே.பி.ராஜரத்ன மற்றும் சிங்கள மொழி பாதுகாப்புத் தலைவர் எல்.எச்.மேதானந்த ஆகியோரின் தலைமையிலான குண்டர்களால் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. சிலர் குண்டுக் கட்டாக தூக்கப்பட்டு அருகிலுள்ள சகதிக்குள் வீசப்பட்டனர். இராணுவம், காவல்துறை முன்னிலையில் இந்த தாக்குதல்கள் அரங்கேற்றப்பட்டன. காலி முகத்திடல் தமிழர்களின் இரத்தம் சிந்திய பூமியானது.
அமிர்தலிங்கம் இரத்தம் சிந்திய நிலையில் நாடாளுமன்றத்திற்குள் சென்று அடக்கு முறைக்கு எதிராகக் குரல் எழுப்பினார். ஆத்திரம் அடைந்த தமிழ் இளைஞர்களைத் தந்தை செல்வா பொறுமை காக்குமாறு கோரினார். அஹிம்சைப் போராடத்தைக் கைவிட வேண்டாம் என்றும் தமிழர்களைக் கேட்டுக்கொண்டார். தமிழர்கள் இரத்தம் சிந்துவதை வேடிக்கை பார்த்த சிங்கள தலைவர்கள் நாடாளுமன்றின் உள்ளே சென்று தனிச் சிங்களச் சட்டத்தை ஏகமனதாக நிறைவேற்றினர். இந்த வரலாறு எத்தனை சிங்கள இளைஞர்களுக்குத் தெரியும்.
ஏன், இன்று நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறை ஒழிக்கப்பட வேண்டும் என மக்கள் இரவு பகலாகத் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுகின்ற இதே காலி முகத்திடலில் தான் 1978ல் ஜே.ஆர்.ஜெயவர்த்தனா மக்கள் முன்னிலையில் முதலாவது நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதியாகப் பதவி பிரமாணமும் செய்து கொண்டார்.
இவ்வாறான வரலாற்றுச் சிறப்புமிக்க காலி முகத்திடலில் மக்களின் போராட்டம் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது. மக்கள் பிரதிநிதிகள் என்று சொல்பவர்கள் எத்தனை பேர் மக்களின் இவ்வாறான போராட்டங்களுக்கு செவி சாய்க்கின்றனர், மதிப்பளிக்கின்றனர்.
நேற்றைய தினம் பாராளுமன்றத்திலே பல நாடகதாரர்களின் முகத்திரைகள் மக்களுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டப்பட்டுள்ளன. வெறுமனே 65 பாராளுமன்ற உறுப்பினர்கள் மாத்திரமே மக்கள் பக்கம் நிற்பதென்பது மிகவும் வேதனையான விடயம். இதனை சிங்கள மக்கள் தான் உணர்ந்து கொள்ள வேண்டும். இந்த நாட்டின் மூவின மக்களும் ஒற்றுமையாக இருந்தால் தான் இந்த நாடு செழிப்பாகும்.
அவ்வாறான ஒற்றுமை என்பது வெறுமனே வாயளவில் மாத்திரமல்லாமல் செயற்பாட்டில் உருவாக்கப்பட வேண்டும். தமிழர்கள் இத்தனை காலம் மேற்கொண்டு வரும் போராட்டங்களுக்கான தீர்வு விடயத்தில் சிங்கள இளைஞர்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இதற்கான முன்னெடுப்புகளை சிங்கள இளைஞர்கள் மத்தியில் இருந்து உருவெடுக்கப்பட்டால் தான் இந்த நாடு மீட்சி பெறும். ஆனால் அதற்கு இந்த இனவாதத் தலைவர்கள் ஒரு போதும் இடமளிக்க மாட்டார்கள்.
எனவே காலி முகத்திடலிலே போராடிக் கொண்டிருப்பவர்களே, அவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்குபவர்களே கடந்த காலங்களில் தமிழர்களுக்கு ஏற்பட்ட அநீதிகளைத் தடுத்து, தமிழ் மக்களுக்கான விமோசனம் கிடைக்கு வகையில் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுமாக இருந்தால் இன்று காலி முகத்திடலிலே வடக்கு கிழக்கு தமிழ் மக்கள், தமிழ் இளைஞர்கள் நிரம்பியிருப்பார்கள்.
இன்று ஏற்பட்டுள்ள பொருளாதாரக் கஷ்டத்தில் இருந்து மக்கள் மீண்டெழுவது மிகவும் கடினம். கண்கெட்ட பின்னர் சூரிய நமஸ்காரம் என்பது போல சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை தற்போது நாடியிருக்கிறார்கள். அதன் உதவி அந்தளவு விரைவில் கிடைக்கும் என்பதற்குச் சாத்தியம் இல்லை என்று தெரிவித்தார்.