தமிழர்களின் நிலங்களை அபகரித்து சிங்களக் குடியேற்றங்களை நிறுவுவதை இனிமேலும் பொறுத்துக்கொள்ள முடியாது. தமிழர்களின் பாரம்பரியத் தொன்மையை எடுத்துச் சொல்லும் பறாளாய் முருகன் ஆலயத்திலே இன்று வர்த்தகமானி என்ற அதிகாரத்தை சிறிலங்கா பௌத்த பேரினவாத அரசு கைகளிலே அதிகாரத்தை வைத்துக்கொண்டு மேற்கொள்ளும் செயற்பாடுகள் மூலம் எமது இனத்தின் தொன்மையை அழித்து விட முடியாது என பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் ஏற்பாட்டாளர் வேலன் சுவாமிகள் தெரிவித்தார்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இன்றைய தினம் சுழிபுரத்தில் போராட்டமொன்று இடம்பெற்றது.
இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இவ்வருடம் பெப்ரவரி மாதம் வெளியிடப்பட்ட வர்த்தகமானியிலே சுழிபுரம் பறாளாய் முருகன் ஆலயத்திலுள்ள அரச மரம் தொல்பொருட் சின்னமாக அடையாளப்படுத்தப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.
தமிழர்கள் காலங் காலமாக வழிபட்டு வந்த ஆதி வழிபாட்டுமுறைப் பாரம்பரியங்களைக் கொண்டுள்ள தமிழர்களின் வடக்குக் கிழக்குத் தாயகத்திற்கு பௌத்தம் கெண்டுவரப்பட்ட சங்கமித்தை வந்த காலத்தில் சிங்களம் என்ற மொழி, இனம் கிடையாது.
ஆனால் அந்தக் காலத்தில் தமிழர்கள் ஆட்சி புரிந்தும் பாரம்பரியமாக வழிபாடுகளை நடாத்தியும் வந்துள்ளனர்.
தமிழர்களின் பாரம்பரியத் தொன்மையை எடுத்துச் சொல்லும் பறாளாய் முருகன் ஆலயத்திலே இன்று வர்த்தகமானி என்ற அதிகாரத்தை சிறிலங்கா பௌத்த பேரினவாத அரசு கைகளிலே அதிகாரத்தை வைத்துக்கொண்டு மேற்கொள்ளும் செயற்பாடுகள் மூலம் எமது இனத்தின் தொன்மையை அழித்து விட முடியாது.
தொல்பொருள் என்பது மிகவும் தொன்மையை எடுத்துக் கூறுவது. அந்த வகையில் இங்கு அனைத்து இடங்களிலும் தமிழர்களின் வழிபாட்டிடங்களே காணப்பட்டிருக்கின்றன. மாறாக சி்ங்கள பௌத்தத்திற்கும் தேரவாத பௌத்தத்திற்கும் எள்ளளவும் இடங்கிடையாது.
தமிழர் தாயகத்தில் பறாளாய் முருகன் ஆலயம், கீரிமலை, குருந்தூர் மலை, தையிட்டி, வெடுக்குநாறி மற்றும் மயிலத்தனைமடு போன்ற இடங்களைத் தொல்லியற் திணைக்களம் அடாவடியாக வர்த்தகமானி மூலமாகவும் ஏனைய விதங்களூடாகவும் கையகப்படுத்தி எமது நிலங்களை அபகரித்து சிங்களக் குடியேற்றங்களை நிறுவுவதை இனிமேலும் பொறுத்துக்கொள்ள முடியாது.
இவ் வர்த்தகமானியை உடனடியாக மீளப்பெற வேண்டும். தமிழர் தரப்பிலுள்ள அனைவரும் இதற்குக் குரல் கொடுக்க வேண்டும்.
சர்வதேசம் அனைத்தையும் பார்த்துக்கொண்டிருப்பதால் நிச்சயம் நீதி கிடைக்கும். எமக்கென்று ஒரு காலம் வந்து சுயநிர்ணய உரிமை அடிப்படையில் எமக்குரிய தீர்வை நாமே தீர்மானிக்கின்ற பொழுது பார்த்துக்கொள்ளலாம்.
அறம், நீதி என்றோ ஓர் நாள் வெல்லும் என்ற நம்பிக்கையில் பயணித்துக்கொண்டிருக்கின்றோம். ஈழத்தமிழர்களின் நிரந்தரதீர்வு சர்வதேச கண்காணிப்புடன் பொதுசன வா்கெடுப்பாக நடாத்தப்பட்டு எமது தலைவிதியை நாமே தீர்மானிக்க வேண்டும் என்றார்