ஈழத்தமிழர் வரலாற்றில், உணர்ச்சிமிக்கதாகப் பேசப்படுவது யாழ்ப்பாணத்தில் தமிழாராய்ச்சி மாநாட்டின் இறுதிநாளில் நிகழ்ந்த வன்முறை பற்றிய கதைகளுமாகும்.
செவிவழிக் கதைகள் போல, இக்கதைகள் அரை உண்மைகளாகச் சொல்லப்பட்டு, இன்று சமூகத்தில் அவை நிலைபெற்றுள்ளன. அச்சம்பவங்களும் அதைச் சூழ்ந்த நிகழ்வுகளும் பற்றிய முழுமையான தேடலோ விசாரணையோ இல்லாமல், இன்றுவரை அக்கதை திரும்பத் திரும்பச் சொல்லப்படுகிறது.
ஈழத்தமிழர் வரலாற்றின் முக்கியமான திருப்புமுனை அச்சம்பவம். ஆனால், ஏனைய நிகழ்வுகளுக்குக் கொடுக்கப்படுகின்ற முக்கியத்துவம் இதற்குக் கொடுக்கப்படுவதில்லை. காரணம் சொல்லப்பட்டுள்ள கதைகளில் உள்ள கோளாறும் அதன் நியாயமற்ற தன்மையுமாகும். தேடி விசாரித்தறியத் தவறும் சமூகம், எத்தகையதொரு கொடிய தண்டனையை எதிர்நோக்க வேண்டிவரும் என்பதற்கு, இச்சம்பவம் நல்லதொரு சான்று.
சுதந்திரத்துக்குப் பிந்தைய இலங்கையில், தமிழருக்கு எதிரான தொடர்ச்சியான நடவடிக்கைகளை, அரசாங்கங்கள் மேற்கொண்டு வந்த நிலையில், தமிழ்த் தலைவர்களுக்கும் அரச தலைவர்களுக்கும் இடையில் எட்டப்பட்ட உடன்படிக்கைகள், தொடர்ச்சியாகத் தோல்வியடைந்தன.
குறிப்பாக, பண்டாரநாயக்க செல்வநாயகம் உடன்படிக்கைப்படி, குடியேற்றத் திட்டங்கள் மீதான அதிகாரம் உடைய மாவட்ட சபைகள் நிறுவப்படும் என ஏற்கப்பட்டது. அதே அடிச்சுவட்டில், டட்லிசெல்வா உடன்படிக்கை தோற்றம் பெற்றது. இரண்டும் செயல்வடிவம் பெறவில்லை.
இவற்றின் மூலம், குறைந்தபட்ச அதிகாரப் பகிர்வுக்குக் கூட, பேரினவாதக் கட்சிகள் தயாராக இல்லை என்பதை மிகத் தெளிவாகக் காட்டின. ஆனால், இந்நிலைப்பாடு ஐக்கிய தேசிய கட்சியோடு தொடர்ந்தும் நல்லுறவைப் பேணுவதற்கு, தமிழரசுக் கட்சிக்குத் தடைகள் இருக்கவில்லை. இவ்வுறவு 1960களில் புதிய பரிமாணம் கண்டது.
1970ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில், சிறிமா தலைமையிலான ஐக்கிய முன்னணி, மூன்றில் இரண்டுக்கும் மேலான பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வந்தது. அப்போது தமிழரசுக் கட்சியின் தலைவர் எஸ். ஜே. வீ. செல்வநாயகம், “தமிழரை இனிமேல் கடவுள் தான் காப்பாற்ற வேண்டும்” என்று சொன்னார்.
இது ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான ஆட்சியை, பேரினவாத ஆட்சியாகக் கண்டதை மட்டுமன்றி, அரசாங்கத்தை அமைப்பதில் செல்வாக்குச் செலுத்தக்கூடிய நிலையை தமிழரசுக் கட்சி இழந்த ஏமாற்றத்தையும் குறித்தது. புதிய அரசாங்கத்துடன் செயற்படவியலாத வகையில், தமிழரசுக் கட்சி ஐக்கிய தேசிய கட்சியோடு தன்னை நெருக்கமாகப் பிணைத்துக் கொண்டது. இதனால் அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கக் கூடிய ஒரு நிலையை இழந்தது.
இதில் கவனிப்புக்கு உரியது. யாதெனில், தமிழ் மக்களின் தெரியப்பட்ட பிரதிநிதிகளையுடைய தமிழரசுக் கட்சியோடு அலட்சியமான முறையிலேயே அரசாங்கம் நடந்து கொண்டது. குறிப்பாக, யாழ்ப்பாண மாநகர மேயராக இருந்த அல்பிரட் துரையப்பாவுக்கு அரசாங்கம் கொடுத்த முக்கியத்துவம், தமிழரசுக் கட்சிக்குச் சினமூட்டியது.
இதன் தொடர்ச்சியாக அரசியலில் அறிமுகமில்லாத, மக்களால் அறியப்படாத செல்லையா குமாரசூரியர் என்ற பொறியியலாளரை, மூதவையான செனட் சபைக்கு நியமித்த அரசாங்கம், அவரை தபால் தொலைத்தொடர்பு அமைச்சராக்கியது. இச்செயல்கள் மூலம், தமிழர் நலன்களைத் தங்களது தமிழர்கள் மூலமே கவனித்துக்கொள்ளவியலும் என்பதைக் கோடுகாட்டியதோடு, தமிழரசுக் கட்சியினரைப் புறக்கணித்தது.
இக்காலப்பகுதியில், சிறுபான்மையினரது நலன்கள் தொடர்ச்சியாக நெருக்குதலுக்கு உள்ளாகின. தமிழ் மக்களுக்கு குமாரசூரியர் அமைச்சரானது போல, பதியூதின் மஹ்மூத்தை கல்வி அமைச்சராக்கி, அவரூடாக முஸ்லிம்கள் நலன்கள் பிரதிநிதித்துவப்படுத்தப்படுவதாக அரசு காட்டிக் கொள்ள முயற்சி செய்தது.
சிறிமாவின் அரசு தொடர்ச்சியாக, சிறுபான்மையினரின் நலன்களைப் புறக்கணித்து வந்தது என்பதும் இந்த அமைச்சரவை நியமனங்கள் சிறுபான்மையின நலநோக்கில் செய்யப்பட்டவையல்ல என்பதும் வெளிப்படையானது.
இவ்வாறு, 1970களில் தமிழ்ப் பாரளுமன்றப் பிரதிநிதிகளும் அரசாங்கமும் தொடர்ச்சியான மோதற்போக்குடன் தொடர்ந்த நிலையில், 1972ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட புதிய அரசியலமைப்பு, சிறுபான்மையினருக்கான பேரினவாத நிகழ்ச்சிநிரல் ஒன்றை, அரசாங்கம் முன்னெடுக்கிறது என்பதைக் காட்டியது.
ஈழத்தின் முன்னோடியான தமிழ் அறிஞர்களில் ஒருவராகிய தனிநாயகம் அடிகளாரின் அயராத முயற்சியால், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் உருவாக்கப்பட்டு, 1966இல் கோலாலம்பூரில் முதலாவது தமிழாராய்ச்சி மாநாடு நடத்தப்பட்டது.
அதைத் தொடர்ந்த இரண்டாவது மாநாடு, 1968இல் சென்னையிலும் மூன்றாவது 1970இல் பிரான்ஸ் தலைநகர் பாரிஸிலும் நடைபெற்றன. பாரிஸ் மாநாட்டைத் தொடர்ந்து, நான்காவது மாநாட்டை இலங்கையில் நடத்துவது என்று முடிவானது.
மாநாடுகள் தொடர்ச்சியாக, இரண்டாண்டு கால இடைவெளியில் நடத்தப்பட்ட நிலையில், இலங்கையில் 1972இல் இம்மாநாட்டை நடத்தத் திட்டமிடப்பட்டது. அரசியல் தலையீடுகள் காரணமாக, இது 1974 ஜனவரியிலேயே சாத்தியமானது.
இம்மாநாட்டை நடத்துவதற்குப் பொறுப்பான தமிழாராய்ச்சி நிறுவனத்தின் இலங்கை கிளை, இம்மாநாட்டை கொழும்பிலேயே நடத்தத் திட்டமிட்டது. ஆனால், தமிழரசுக் கட்சியினர் இதை யாழ்ப்பாணத்தில் நடத்த விரும்பினர். இலங்கை கிளையில் இருந்த தமிழரசுக் கட்சியின் ஆதரவாளர்களின் அழுத்தத்தால், இம்மாநாடு யாழ்ப்பாணத்துக்கு மாற்றப்பட்டது.
அமைச்சராக இருந்த குமாரசூரியர், இம்மாநாட்டை கொழும்பில் நடத்த விரும்பினார். அதன்மூலம், தனக்கு அரசியல் இலாபம் தேடலாம் எனக் கணித்தார். எனவே, மாநாட்டை எங்கே நடத்துவது என்ற இழுபறி தொடர்ந்தது. இதனால் இம்மாநாடு ஓர் அரசியல் பிரச்சினையானது.
உலகளாவிய தமிழ் அறிஞர்கள் பங்குகொள்ளும் ஒரு மாநாட்டை, அரசியல் பிரச்சினையாக்கக் கூடாது என்பது, பலரது கருத்தாக இருந்தது. பல தமிழறிஞர்கள் இக்கருத்தோடு உடன்பட்டார்கள். சிலர், இதனை அரசியலாக்குவதன் ஆபத்துகள் குறித்து எச்சரித்தனர்.
தேர்தலில் படுதோல்வி அடைந்திருந்த தமிழரசுக் கட்சி, தங்கள் செல்வாக்கை மீட்பதற்கான வாய்ப்பாக, இதைப் பயன்படுத்த முயன்றது என்பதை, மாநாடு சார்ந்த நடவடிக்கைகள் உணர்த்தின.
யாழ்ப்பாணத்தில் நடத்துவதற்கு எட்டப்பட்ட முடிவை, அரசாங்கம் பகையாகக் கண்டது. இதனால், மாநாட்டுக்கு வருகை தருவோருக்கான விசாக்கள் தாமதமாகின. அரசியல் பிரமுகர்களுக்கு விசா மறுக்கப்பட்டது. அரசுக்குரிய பாடசாலை மண்டபங்கள் மறுக்கப்பட்டன. அரசாங்கத்தின் ஆதரவுடைய அல்பிரட் துரையப்பா, யாழ்ப்பாண மேயராக இருந்தது ஒழுங்கமைப்பாளர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தியது.
அரசாங்கம் நெருக்கடிகளைக் கொடுத்தாலும், இம்மாநாட்டை யாழ்ப்பாணத்தில் நடத்துவதற்கு சிங்கள மக்கள் மத்தியிலும் ஆதரவு இருந்தது. சிங்களப் பொதுமக்கள், அறிஞர்கள் எனப் பலர் இந்த மாநாட்டை வரவேற்று ஆதரவு வழங்கினார்கள். இந்தத் தகவலை, இலங்கை கிளைக்குத் தலைவராக இருந்த பேராசிரியர் சு. வித்தியானந்தன், அம்மாநாட்டு நினைவுமலருக்கு எழுதிய செய்திக்குறிப்பில் விதந்துரைத்துள்ளார்.
இம்மாநாடு, அறிஞர்கள் பங்குகொள்கின்ற தமிழாய்வை முன்னெடுக்கும் ஒரு நிகழ்வு. ஆனால், இதைப் பொது மக்களுக்கான நிகழ்வாக மாற்றுவது என்ற யோசனை, தமிழரசுக் கட்சியினரால் முன்மொழியப்பட்டது. இதற்கு எதிர்ப்புகள் இருந்தபோதும், இறுதியில் இம்முன்மொழிவு ஏற்கப்பட்டு, இறுதிநாள் நிகழ்வானது பொதுமக்களுக்கான நிகழ்வாக, யாழ்ப்பாணம் முற்றவெளியில் நடத்த முடிவானது.
இந்நிகழ்வு நோக்கிய நகர்வுகள், ஏட்டிக்குப் போட்டியானவையாக மாறின. அரசாங்கம் என்னவகையில் தடுத்தாலும், நிகழ்வை நடத்தியே தீருவது என்று தமிழரசுக் கட்சி கங்கணம் கட்டிக்கொண்டது.
இதன் ஒருபகுதியாக, விசா மறுக்கப்பட்ட தமிழ்த் தேசியவாதியான ஜனார்த்தனனைக் களவாகக் கொண்டு வந்து, மேடையேற்றுவது என்று தமிழரசுக் கட்சித் தலைவர்கள் சிலரும் இளைஞர்களும் முடிவெடுத்தனர். இதன்மூலம் அரசாங்கத்தின் முகத்தில் அறைவது என்று முடிவானது.
இதன்படி, படகுவழியாகக் கள்ளமாக யாழ்ப்பாணத்துக்கு அழைத்துவரும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. இத்திட்டம் குறித்த செய்திகள், பொலிஸாருக்குத் தெரிந்திருந்தன. ஒருவேளை, ஜனார்த்தனனை மேடையேற்ற முயன்றால், அதைத் தடுப்பதென்றும் தேவையேற்படின் அவரைக் கைது செய்வதென்றும் அரசாங்கம் முடிவெடுத்தது. இவை, ஓர் ஆராய்ச்சி மாநாடு, எவ்வாறு அரசியலானது என்பதற்கான சாட்சியங்கள்.
ஜனார்த்தனன் மேடையேற, அதைத்தடுக்க பொலிஸார் மேடையை நோக்கி விரைந்தனர். பொலிஸாரை இளைஞர்கள் தடுத்தனர். பொலிஸாருக்கும் இளைஞர்களுக்கும் இடையில் கைகலப்பு ஏற்பட்டது.
கூட்டத்தைக் கலைக்க, பொலிஸார் வானத்தை நோக்கிச் சுட்டனர். பெருமளவில் முற்றவெளியில் கூடியிருந்த மக்கள் சிதறி ஓடினர். மின்சாரக் கம்பிகள் சரிந்து விழுந்ததில், மின்சாரம் தாக்கி ஏழு பேர் உயிரிழந்தனர். இவ்வுயிரிழப்புகளுக்கு அரசாங்கம் பொறுப்பு என்பதில் மாற்றுக்கருத்தில்லை.
ஆரம்பம் முதலே, இம்மாநாடு குறித்த பகையுணர்வும் சட்டம், ஒழுங்கை பொலிஸ் பேணத்தவறியமையும் ஏற்புடையதல்ல. அதேவேளை, இந்த உயிரிழப்புகள் குறித்த எந்தவொரு விசாரணையையும் அரசாங்கம் மேற்கொள்ளவில்லை.
இதேவேளை, இந்த அனர்த்தத்துக்கு தமிழரசுக் கட்சியும் பொறுப்பு என்பதை மறுக்கவியலாது. தமிழரசுக் கட்சியின் பொறுப்பற்ற செயல்குறித்து யாரும் பேசுவதில்லை. இவ்வாறு, மக்களைக் குறிவைப்பதனூடாக, அரசியல் ஆதாயம் பெறும் புதிய யுத்தியை, தனது தேர்தல் அரசியலுக்காக தமிழரசுக் கட்சி தொடங்கியது.
இந்நிகழ்வுகள் தமிழரசுக் கட்சியின் உணர்ச்சிகர அரசியலுக்கு வலுவூட்டி, அரசியல் வன்முறைகளை இளைஞர்கள் கையிலெடுப்பதற்கு வழிகோலியது. இவ்வகையான வன்முறைகளுக்கு, மௌன அங்கிகாரத்தை வழங்கின. இதைத் தொடர்ந்து, துரையப்பாவில் தொடங்கியது கொலைக் கலாசாரம். அது, ஈழத் தமிழர் வரலாற்றின் கறைபடித்த பக்கங்கள்.