தமிழ்த் தரப்பு ஒருமித்த நிலைப்பாட்டில் இல்லாவிட்டால் அதிகாரங்கள் பறிபோவதை தடுக்க முடியாது -ரெலோ ஊடகப் பேச்சாளர் சுரேந்திரன்

மாகாண சபைக்குரிய அதிகாரங்கள் பறிக்கப்படுவது தொடர்ந்தும் நடைபெற்று வருகிறது. மாகாணசபைக்கு சொந்தமான வைத்தியசாலைகளை மத்திய அரசாங்கம் கையகப்படுத்தும் அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. எமக்குரிய அதிகாரங்கள் பறிக்கப்படுவதாக தமிழர் தரப்புகளில் இருந்து குற்றம் சாட்டி அறிக்கைகள் வெளிவந்து கொண்டிருக்கிறன. இந்த நிகழ்ச்சி நிரல் ஆரம்பமோ முடிவோ அல்ல. முன்னைய காலங்களில் இருந்தே தொடர்ந்தும் இப்படியான அதிகாரப் பறிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

மாகாண பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாக தரம் உயர்த்தி மெதுவாக மாகாண சபைக்குரிய பாடசாலைகளை கையகப்படுத்த மத்திய அரசு ஆரம்பித்திருந்தது. அதேபோல அபிவிருத்தி என்ற போர்வையில் காணி நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு வருகின்றன. உள்ளூராட்சி சபையின் அனுமதிகள் இல்லாமலே அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுக்கும் வேலைத்திட்டங்கள் ஆரம்பமாகியுள்ளன. இப்போது மாகாணசபை வைத்தியசாலைகளை கையகப்படுத்துவதற்கான அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.
இப்படியாக ஒவ்வொரு நிகழ்வுகளும் நடக்கின்ற போது மாத்திரம் அதற்கு எதிராக குரல் கொடுக்கும் நடவடிக்கையையே நாம் செய்கிறோம். தீர்க்கதரிசனமாக, நாங்கள் போராடி இரத்தம் சிந்தி பெற்ற ஆகக்குறைந்த அதிகாரங்கள் கூட எங்கள் கைகளை விட்டு பறிபோவதை தடுப்பதற்கான, வரும் முன் காக்கும் நடவடிக்கையாக ஒருமித்த வேலைத்திட்டம் அல்லது ஒருமித்த நிலைப்பாடு தமிழ் தரப்பிடம் இல்லை.

தேர்தல் அரசியலை நோக்கிய கட்சி பூசல்களை முன்வைத்து செயற்படுவதனால் இருப்பவற்றை தக்கவைத்துக்கொள்ள முடியாது. நாம் இரத்தம் சிந்திப் போராடி பெற்ற, ஆகக் குறைந்த அதிகாரங்கள் இவை. நம்முடைய அரசியல் தீர்வாக மாகாணசபையையின் அடிப்படையிலான அதிகாரப் பகிர்வை நாம் கருதவில்லை. அதில் எல்லோரும் தெளிவாகவே உள்ளோம். ஆனால் இருப்பவற்றை இழந்துவிடாமல் காப்பது இனத் தலைவர்களின் கடமை.

இதன் அடிப்படையில் ஒருமித்த நிலைப்பாட்டுக்கு தமிழர் தரப்பு வர வேண்டியது காலத்தின் கட்டாயம். இதை பல தடவை நாம் வலியுறுத்தி இருந்தாலும் தத்தமது பதவி, கட்சி அரசியல் நலன்களுக்காக அதற்கான பேச்சுக்களை முன்னெடுக்கும் போது சில தரப்புக்கள் தயக்கம் காட்டி வருவது வருத்தத்துக்குரிய விடயம். அதிகாரங்கள் பறிக்கப்படுவதற்கு ஒருமித்த நிலைப்பாட்டில் எதிர்வினையாற்றாது விட்டால் எவ்வித பலனுமற்ற மாகாண சபை என்று எலும்புக்கூடு தான் எங்களுக்கு மிஞ்சப் போகிறது.

அதையும் தாண்டிய கொள்கை ரீதியாக சமஷ்டி அல்லது சுயாட்சி அலகு முறையான தீர்வு திட்டத்துக்கான பேச்சு வார்த்தைகளும் அதற்கான ஆதரவுகள் சர்வதேச மட்டத்தில் வலுப்பெற்று வந்தாலும் ஏற்கனவே அரசியல் யாப்பிலும் எமது கைகளிலும் இருப்பதை இழந்துவிடாமல் பாதுகாத்துக் கொள்ள வேண்டிய அவசியத்தை நாங்கள் வலியுறுத்துகிறோம். அது ஒரு தீர்வாக அல்லாவிட்டாலும் இருக்கும் உரிமையை இழக்காமல் இருப்பதற்காகவே ஒருமித்த நிலைப்பாடு அவசியமாகிறது. பட்டுவேட்டி கோரிக்கை வைத்து இருக்கிறோம் என்பதற்காக இடுப்பில் இருக்கும் துண்டு மெதுவாக உருவ படுகின்ற பொழுது அதை தடுத்து நிறுத்த வேண்டியது அவசியம் என்பது அனைவருக்கும் தெரிந்த ஏற்றுக்கொள்ள பட்ட யதார்த்தம்.

ஆகவே தமிழர் தரப்பாகிய நாங்கள் ஒவ்வொரு சம்பவத்திற்கும் பதில் அறிக்கை அல்லது பதில் நடவடிக்கை எடுப்பதை விட தீர்க்கதரிசனமாக இந்த அதிகாரங்களை பாதுகாத்துக் கொள்வதற்கு நமக்குள்ளே ஒருமித்த நிலைப்பாட்டின் அடிப்படையில் எதிர்வினையாற்றுவதன் மூலம்தான் மத்திய அரசாங்கத்தின் தலையீடுகளையோ அல்லது திட்டமிட்ட அதிகார பறிப்புகளையோ தடுத்து நிறுத்த முடியும்.

கொரோனா சூழ்நிலை இருப்பதனால் நேரடியான சந்திப்புகள் சாத்தியமில்லாத சூழல் நிலவுகிறது. மிக விரைவில் மெய்நிகர் இணையவழி ஊடாகவேனும் எப்படியான ஒருமித்த வேலைத்திட்டத்தை செயல்படுத்தலாம் அல்லது செயல்படுத்த முடியாது என்ற ஆராய்வுக்கான கலந்துரையாடலுக்கு தமிழ் தேசிய பரப்பில் செயலாற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பிரதிநிகளை தமிழ் மக்களின் நலனை முன்னிறுத்தி இணைந்து கொள்ள கோருகிறோம்.

சுரேந்திரன்
ஊடகப் பேச்சாளர் – ரெலோ
தமிழ் தேசிய கூட்டமைப்பு.