தமிழ் தேசிய கட்சிகளுடனான இரண்டாவது கட்டமான கலந்துரையாடல் -ரெலோ ஊடகப் பேச்சாளர் சுரேந்திரன்

நேற்று 17 07 2021 இரண்டாவது கட்டமான கலந்துரையாடல் தமிழ் தேசிய கட்சிகள் மத்தியில் நடைபெற்றது. தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் அங்கத்துவ கட்சிகள் மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சிகளாகிய ரெலோ மட்டும் புளட் உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.

ஒருமித்த நிலைப்பாட்டில் செயலாற்றுவது பற்றியதான ஆரம்பகட்ட கலந்துரையாடல் காலை பதினொரு மணியிலிருந்து பகல் ஒன்றரை மணி வரைக்கும் நீதியரசர் சி விக்னேஸ்வரன் அவர்களுடைய நல்லூர் கோவில் வீதி இல்லத்தில் நடைபெற்றது.

ரெலோ சார்பில் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் செயலாளர் நாயகம் கோவிந்தன் கருணாகரம் அரசியல் குழு உறுப்பினர் வினோ நோகராதலிங்கம் ஊடகப்பேச்சாளர் சுரேந்திரன் புளட் சார்பில் தலைவர் சித்தார்த்தன் தமிழ்தேசிய மக்கள் கூட்டணி சார்பில் தலைவர் நீதியரசர் சி. விக்னேஸ்வரன் திரு சுரேஷ் பிரேமச்சந்திரன், பேராசிரியர் திரு சிவநாதன், திரு. சிற்பரன் , தமிழ் தேசியக் கட்சியின் சார்பில் திரு சிவாஜிலிங்கம், தமிழர் சுயாட்சி கட்சியின் சார்பில் திருமதி அனந்தி சசிதரன் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

சுமார் இரண்டரை மணி நேரம் நடைபெற்ற இந்த கலந்துரையாடலில் தமிழ்மக்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் இவற்றிற்கு எதிராக கடந்த காலங்களில் ஒருமித்து செயலாற்றிய வரலாறுகள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், தற்பொழுது இருக்கக்கூடிய அரசாங்கத்தின் மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலமும் நிறைவேற்று அதிகாரம் துரிதமான முடிவுகளை தமிழ் மக்களுக்கு எதிராக பிரயோகிக்க முற்படும் போக்கு, இழுத்தடிக்கப்படும் மாகாணசபைத் தேர்தல்கள், தேர்தல் முறை மாற்றம், காணி அபகரிப்பு, திட்டமிட்ட குடியேற்றம், சர்வதேச அரசியல் சூழ்நிலைகள், அரசியல் கைதிகளின் விடுதலை, மனித உரிமைப் பேரவை உட்பட பல்வேறு விடயங்கள் முன்னெடுக்கப்பட்டன.

பிரதிநிதித்துவம் உள்ள தமிழ் தேசிய பாராளுமன்ற உறுப்பினர்கள் பலத்தை ஒருமித்து பயன்படுத்தும் வழிமுறைகளும் ஆராயப்பட்டன.

தற்போதைய சூழ்நிலையில் ஏற்கனவே இருக்கும் கட்சிகள் மற்றும் கூட்டுகள் தங்களுடைய கட்டமைப்பை பேணும் வகையிலும் கொள்கை முரண்பாடுகளை தவிர்த்துக் கொள்ளும் வகையிலும் செயல்பட இணக்கம் காணப்பட்ட பட்டது.

ஒருமித்த நிலைபாட்டில் கடந்த காலங்களிலும் பயணித்த அனுபவம் அனைத்து தரப்பினருக்கும் உள்ளது. ஆகவே எதிர்காலங்களிலும் ஒருமித்த நிலைப்பாட்டில் செயல்படுவது எல்லோராலும் வரவேற்கப்பட்டது.

ஒருமித்த நிலைப்பாட்டில் செயற்படக்கூடிய விடையங்களை தீர்மானிப்பதற்கு முதல்கட்டமாக எமது மக்களின் பிரச்சனைகள் அடங்கிய விபரத்தை தயாரிக்கவும்

துரிதமாகவும் தீவிரமாகவும் செயற்படுவதற்கு இயன்றளவு தொழில்நுட்ப வசதியை பயன்படுத்தி இணைய வழியின் ஊடாகவும் சந்திப்புகளை மேற்கொள்வதும் என்ற ஒருமித்த நிலைப்பாட்டோடு கலந்துரையாடல் நிறைவு பெற்றது

சுரேந்திரன்
ஊடகப் பேச்சாளர் ரெலோ