இலங்கை அரசால் தமிழ் பெண்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நீதி வேண்டி, சர்வதேசத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையில் யாழில் இன்று (திங்கட்கிழமை) தீப்பந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு வடக்கு, கிழக்கில் உள்ள பொது அமைப்புக்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்களின் ஏற்பாட்டில் இன்று நண்பகல் 12 மணிக்கு நல்லூர் பின் வீதியில் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இந்த போராட்டத்தில் மத தலைவர்கள், அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள், பொது அமைப்புக்கள், மாணவர்கள், பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்.
இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்தக்கோரி பல்கலைக்கழக மாணவர்கள், பொது அமைப்புக்கள் இணைந்து வடக்கு, கிழக்கில் சுழற்சிமுறை உணவுதவிர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
அத்துடன் லண்டனில் உள்ள அம்பிகை செல்வகுமார் மேற்குறித்த கோரிக்கை உட்பட 4 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து சாகும்வரையான உணவு தவிர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்.
மேலும் வடக்கு, கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் 4 வருடங்களைக் கடந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதேபோன்று தமிழரின் உரிமைகளுக்காக மேலும் பல தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் நீதிக்காக போராடும் இனத்தின் கோரிக்கைகளை ஐ.நா. கவனத்தில் எடுத்து செயற்படவேண்டும் என வலியுறுத்தி இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.