பொண்டேரா நிறுவனத்தின் அங்கர் வெண்ணெய் உற்பத்தியின் பொதியில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டமை தொடர்பில் வவுனியா மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள நுகர்வோர் அதிகார சபையின் அலுவலகத்தில் முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.
வுவனியா மாவட்ட ஊடகவியலாளர்களான பாஸ்கரன் கதீஷன் மற்றும் ராஜேந்திரன் சஜீவன் ஆகியோரினால் இன்று வெள்ளிக்கிழமை மாலை இந்த முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2020 ஆகஸ்ட் மாதம் 12ம் திகதி, அரசாங்கத்தினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம், உணவுப் பொருட்களின் சில்லறை விலை மற்றும் திகதி உள்ளிட்ட பல விடயங்கள் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கில ஆகிய மும்மொழிகளில் குறிப்பிட வேண்டும் என முறைப்பாட்டாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
எவ்வாறாயினும் பொண்டேரா நிறுவனத்தின் அங்கர் வெண்ணெய் உற்பத்தியின் பொதியில், அரசின் வர்த்தமானி அறிவித்தலை மீறி சீனாவின் மண்டரின் மொழி உள்ளடக்கப்பட்டுள்ள போதிலும் தமிழ் மொழி உள்ளடக்கப்படவில்லை என முறைப்பாட்டாளர்கள் தமது முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளனர்.
அங்கர் வெண்ணெய் உற்பத்தியின் பொதியில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டமை குறித்து சமூக வலைத்தளங்களில் பதிவுகள் வெளியாகியிருந்தது.