திருகோணமலை சீனன்குடா துறைமுகத்தின் மேற்புற தாங்கி திடலானது 99 தாங்கிகளைக் கொண்டமைந்துள்ளதுடன், 2022.01.03ஆம் திகதி
இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டவாறு, அவற்றில் 61 தாங்கிகளை திருகோணமலை பெற்றோலிய முனைய தனியார் கம்பனிக்கு 50 வருடகாலத்திற்கு குத்தகைக்கு வழங்குவதற்கான அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
குறித்த 61 எரிபொருள் தாங்கிகளை அபிவிருத்தி செய்வதற்கான சாத்தியவளக் கற்கை உள்ளிட்ட அடிப்படை படிமுறைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
குறித்த சாத்தியவளக் கற்கை மூலம் இக்கருத்திட்டம் 16 ஆண்டுகளில் 07 கட்டங்களாக அபிவிருத்தி செய்வதற்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளதுடன், அதன் முதலாவது கட்டத்தின் கீழ் பொருளாதார ரீதியாகப் பயனுறு வாய்ந்த 09 தாங்கிகளை மறுசீரமைப்புச் செய்வதற்கும், கிட்டத்தட்ட 1.75 கிலோமீற்றர் தூர வீதியைப் புனரமைப்பதற்கும், ஏற்புடைய ஏனைய வசதிகளை நிர்மாணிப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இக்கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக நிர்மாணித்தல், நடைமுறைப்படுத்தல் மற்றும் ஒப்படைத்தல் (BOT) எனும் வணிக மாதிரியைப் பின்பற்றுவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது.
அதற்கமைய, முதலாவது கட்டத்தின் கீழ் மேற்கொள்வதற்கு உத்தேச அபிவிருத்தித் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்குப் பொருத்தமான முதலீட்டாளரைத் தெரிவு செய்வதற்காக, குறித்த பெறுகைச் செயன்முறையைக் கடைப்பிடிப்பதற்காக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.