துறைமுக நகர் சட்டமூல வாக்களிப்பில் கலந்துகொள்ளாதது ஏன்: முஸ்லிம் காங்கிரஸ் விளக்கம்

துறைமுக நகர் சட்டமூலத்தில் சாதகமும் பாதகமும் காணப்படுவதால், நேற்று பாராளுமன்றத்தில் இடம்பெற்ற வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லையென ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

நேற்று நடைபெற்ற கொழும்பு துறைமுக நகர ஆணைக்குழு சட்டமூல வாக்கெடுப்பில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் 5 உறுப்பினர்களும் கலந்துகொள்ளவில்லை.

பாராளுமன்ற கட்டடத்தொகுதியில் நேற்று அவர்கள் இருந்த போதிலும், வாக்கெடுப்பின் போது சபையில் பிரசன்னமாகியிருக்கவில்லை.

எந்த முடிவினை எடுத்தாலும் 5 பாராளுமன்ற உறுப்பினர்களும் தலைமைத்துவத்திற்கு கட்டுப்பட்டு ஒரே முடிவினை எடுக்க வேண்டும் என நேற்று முன்தினம் நடைபெற்ற கட்சியின் உயர்பீடக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாக ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர், ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர் தெரிவித்தார்.

அதன் பின்னரே பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துரையாடி, வாக்கெடுப்பில் கலந்துகொள்வதில்லை என்ற முடிவை எடுத்ததாக அவர் கூறினார்.

துறைமுக நகர சட்டமூலத்தில் சாதகங்களும் பாதகங்களும் காணப்படுவதனால் நடுநிலை வகிக்க வேண்டும் என கட்சி எடுத்த தீர்மானத்திற்கு ஏற்ப வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லையென ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர் பீட உறுப்பினரும் பாராளுமன்ற உறுப்பினருமான பைஸல் காசிம் தெரிவித்தார்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் உறுப்பினர்களும் நேற்றைய வாக்கெடுப்பில் இரட்டை நிலைப்பாட்டைக் கொண்டிருந்தனர்.

கட்சியின் தலைவர் ரிஷாட் பதியுதீன், முஷாரப் முதுநபீன் ஆகியோர் துறைமுக நகர சட்ட மூலத்திற்கு எதிராக வாக்களித்த போதிலும், அந்த அணியை சேர்ந்த அலிஷப்ரி ரஹீம் மற்றும் இஷாக் ரஹ்மான் சட்டமூலத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர்.

அண்மையில் நடைபெற்ற பிரதமரின் இப்தார் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களில், நசீர் அஹமட், எச்.எம்.எம்.ஹாரிஸ், அலி ஷப்ரி ரஹீம், எம்.எஸ். தௌபிக், இஷாக் ரஹ்மான், பைஸல் காசிம் ஆகியோர் துறைமுக நகர சட்டமூல வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை.

இவர்கள் 20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கும் ஆதரவாக வாக்களித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.