த.தே. கூ. வல்வெட்டித்துறை நகரசபையின் ஆட்சி அதிகாரத்தை இழந்தது

வல்வெட்டித்துறை நகரசபையின் ஆட்சி அதிகாரத்தை தமிழ் தேசியக் கூட்டமைப்பு இன்று இழந்தது.

நகர சபையின் உப தலைவராக பதவி வகித்து வந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினரின் ஆதரவுடன் சுயேட்சைக் குழுவொன்று நகரசபையின் அதிகாரத்தை கைப்பற்றியுள்ளது.

வல்வெட்டித்துறை நகரசபையின் தலைவராக பதவி வகித்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கோ.கருணானந்தராசா கடந்த பொதுத்தேர்தலில் தமிழ் தேசியக் கட்சிக்கு ஆதரவாக பரப்புரை செய்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து தனது இராஜினாமா கடிதத்தை கட்சிக்கு அனுப்பிவைத்த அவர் கொரோனா தொற்று காரணாக கடந்த மாதம் காலமானார்.

இந்த நிலையில், புதிய தலைவர் தெரிவிற்கான வாக்கெடுப்பு இன்று நடைபெற்றது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் உப தலைவர் ஞானேந்திரன் சுயேட்சைக் குழுவிற்கு ஆதரவளித்தமையினால், மேலதிக ஒரு வாக்கினால் சுயேட்சைக் குழு நகரசபை ஆட்சியை கைப்பற்றியுள்ளது.

இதனடிப்படையில், சுயேட்சை உறுப்பினர் ச.செல்வேந்திரா வல்வெட்டித்துறை நகர சபையின் புதிய தலைவராக தெரிவாகியுள்ளார்.

புதிய நகரசபை உறுப்பினருக்கு ஆதரவாக நான்கு சுயேட்சை உறுப்பினர்களும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் இரண்டு உறுப்பினர்களும் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி ஆகியவற்றின் இரண்டு உறுப்பினர்களும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நகர சபை உப தலைவரும் வாக்களித்துள்ளனர். அதன் படி, 9 வாக்குகள் அளிக்கப்பட்டுள்ளன.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில், தலைவர் பதவிக்கு போட்டியிட்ட க.சதீஸிற்கு, கூட்டமைப்பின் 6 உறுப்பினர்களும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் 2 உறுப்பினர்களும் வாக்களித்தனர்.