நல்லூரில் அரசடிப் பகுதி முடக்கப்பட்டது!

யாழ்ப்பாணம் நல்லூரில் அரசடிப் பகுதி தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் இன்று (வெள்ளிக்கிழமை) மாலை முதல் முடக்கப்பட்டுள்ளது.

நல்லூர் அரசடிப் பகுதியில் கடந்த ஒரு வாரத்தில் மாத்திரம் 22 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில், அந்தப் பகுதி மக்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டு முடக்கப்பட்டுள்ளது.

நல்லூர் ஜே/103 கிராம அலுவலகர் பிரிவில் உள்ள ஒரு பகுதியான குறித்த அரசடியைத் தனிமைப்படுத்துவதற்கு, மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மாவட்டச் செயலாளர் ஊடாக கொவிட்-19 நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்தும் செயலணிக்கு கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் மாநகர சுகாதார மருத்துவ அதிகாரியினால் இந்தக் கோரிக்கை இன்று காலை முன்வைக்கப்பட்டது.

இதன்படி, குறித்த பகுதியை மாலை ஆறு மணி முதல் தனிமைப்படுத்துவதற்கு சுகாதார மருத்துவ அதிகாரிக்கு அனுமதியளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.