நல்லூர் பிரதேச சபை தவிசாளரின் செயற்பாட்டிற்கு மதுசுதன் கடும் கண்டனம்

நல்லூர் பிரதேச சபையின் எல்லைக்குள் பராமரிப்பற்ற காணிகள் சபை உடைமையாக்கப்படும் என்ற அறிவித்தலை சபையின் தவிசாளர் ப.மயூரன் 22.01.2021 அன்று அறிவித்தல் விடுத்துள்ளதாக ஊடகங்கள் வெளிப்படுத்தியுள்ளன. உண்மையில் சபை கூட்டப்பட்டு பிரதேசத்தில் பராமரிப்பற்ற காணிகள் தொடர்பாக எந்தவொரு கலந்துரையாடலும் மேற்கொள்ளப்படவில்லை என்பதுடன் எந்தவித தீர்மானங்களும் எட்டாமல் எமது மக்களின் காணிகள் அரசுடமையாக்கப்படும் என்ற அறிவித்தலை விடுத்தலானது ஏற்றுக்கொள்ள முடியாதது என நல்லூர் பிரதேச சபையின் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் குமாரசாமி மதுசுதன் தெரிவித்துள்ளதுடன் குறித்த செயற்பாட்டிற்கு எதிராகத் தனது கடும் கண்டனங்களையும் வெளியிட்டுள்ளார்.

இதுதொடர்பில் இன்று(23) கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

குறித்த அறிவித்தலினால் மக்கள் அதிக சினம் கொண்டு எம்மிடம் தெரிவிக்கிறார்கள். கொரோனா காரணமாகவும், அடைமழை காரணமாகவும் வருமானமற்ற நிலையிலேயே துப்பரவுப் பணிகள் இடம்பெறவில்லை எனவும் சபை ஊழியர்களால் தங்களுக்கு உரிய அறிவித்தல் வழங்கப்படவில்லை எனவும் தெரிவிக்கிறார்கள்.

எனினும்,பிரதேசத்தில் பராமரிப்பற்ற காணிகளினால் பார்த்தீனியம்,மற்றும் டெங்கு அபாயங்கள் ஏற்படுவது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும்.

அதனைத் தடுப்பதற்கும், உரிய முறையில் பராமரிப்பதற்கும் பிரதேச சபை சட்ட ஏற்பாட்டுகளின் படி பல முறைகள் உள்ளன . எம்மிடம் அதிகாராங்கள் உள்ளன. எமது சபை மூலம் சிவப்பு எச்சரிக்கை விடுதல்,தண்டம் அறவிடல் போன்ற செயற்பாடுகள் அல்லது நீதிமன்றத்தினூடான நடவடிக்கைகள் போன்றன காணப்படுகின்றன. அத்துடன் உள்ளூராட்சி மன்றக் காணி கையாளல் சம்பந்தமான அதிகாரங்கள் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளன.

காணி உடமையாளர்களின் காணிகளை உரிய முறையில் பராமரிக்கச் செய்வதற்கு எமது சபையிடம் போதிய வரம்புகளும், சக்திகளும், ஏதுக்களும் இருக்கும் போது அதனைத் தவிசாளருக்குரிய அதிகாரத்தினைப் பயன்படுத்தி அமுல்படுத்தாமல் எமது தமிழ்மக்களின் காணிகளினை அரச உடைமையாக்கப்படும் என அறிவித்தமையானது எமது நிலங்களை அரசுக்குத் தாரைவார்க்கும் செயற்பாடாகும்.

ஏற்கனவே, பல திணைக்களங்கள் மூலம் எமது தமிழர் நிலங்கள் கபளீகரம் செய்யப்படும் தறுவாயில் அதற்கான எதிர்ப்புக்களும் கோசங்களும் எம்மிடையே வலுப்பெற்று வரும் இந்நாட்களில் எமது தமிழர் காணிகள் அரசுடமையாக்கப்படும் என விடுத்த அறிவிப்பானது இன்னும் பேரினவாதத்திற்கு தூபம் போடும், அவர்களை ஊக்குவிக்கும் செயலாகும். இதனை அரசே இனிச் செயற்படுத்த வழி வகை செய்வதாக அமைந்துவிடும். இதை நாம் வன்மையாக கண்டிக்கிறோம்.

பிரதேசத்தில் காணி விற்றல் ,வாங்கல் மூலம் சபைக்கு அதிக வருமானம் கிடைக்கிறது. அந்த வருமானங்களைக் கொண்டு பராமரிப்பற்ற காணிகளினை பராமரிக்க சில முன்மாதிரியான நடவடிக்கைகளினை நாம் எடுக்க வேண்டும்.

இருக்கும் அதிகாரங்களை சிறப்பாக பயன்படுத்தி மக்கள் சேவையாற்ற வேண்டுமே ஒழிய மக்கள் வரிப் பணத்தில் சபை நடாத்திக் கொண்டு அவர்களுக்கு எதிராக நாம் செயற்படுவது சிறப்பான ஒன்றல்ல.

எனவே, மக்கள் விரோத நிலைப்பாடுகளை எடுக்காமல் இனிச் சபையில் கூடி கலந்துரையாடி ஆக்கபூர்வமான, இனத்திற்கு நலன் சேர்க்கும் பிரதேசத்தின் வளர்ச்சிக்குமுரிய நடவடிக்கைகளினை மேற்கொள்ளாமல் இப்படிச் செயற்படுவதனை வன்மையாக கண்டிக்கிறோம் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.