நாடு நிதி ரீதியில் நெருக்கடியான காலக்கட்டத்தை கடந்துவரும் இந்த சந்தர்ப்பத்தில் நிதி ஒழுங்குவிதிகளை இறுக்கமாக கடைபிடிக்க வேண்டிய கடற்பாடு இருப்தாக அமைச்சரவை இணை பேச்சாளரும் அமைச்சருமான கலாநிதி ரமேஷ் பத்திரன நேற்று (31) தெரிவித்துள்ளார்.
தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை நீடிப்பது அல்லது முடிவுறுத்துவது குறித்து அமைச்சரவையில் கலந்துரையாடப்படவில்லை என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டார். இதில் கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன, இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயக்கொடி அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம் மொஹான் சமரநாயக்க ஆகியோரும் கலந்துகொண்டனர்.
நேற்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது அரச நிறுவனங்களில் கடுமையான நிதி ஒழுங்கைப் பேண வேண்டியதன் அவசியத்தை நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச சுட்டிக்காட்டியதாகவும் அமைச்சர் ரமேஷ் பத்திரன கூறினார்.
நடைமுறைப்படுத்த முடியாத யோசனைகள் தொடர்பில் கவனம் செலுத்த கூடாது. தேவையற்ற கொடுப்பனவுகளை நிறுத்தி கடுமையான நிதி கட்டுப்பாட்டை நாட்டில் முன்னெடுக்க வேண்டும் என அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.
ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேல்விக்கு பதிலளித்த அமைச்சர் ,சர்வதேச நாணய நிதியம் தொடர்பில் செயற்படுவது குறித்த இறுதித் தீர்மானம் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை என்று தெரிவித்தார்.
அத்தியாவசியமற்ற ஆட்சேர்ப்பு நடவடிக்கை நிறுத்தப்பட வேண்டும். இதேபோன்று தனிமைப்படுத்தல் ஊரடங்கு நடைமுறைப்படுததப்பட்டுள்ள இக்காலப்பகுதியில் அதிகாரிகளுக்கு எரிபொருளுக்கான கொடுப்பனவு வழங்கப்படுமாயின் அதுதொடர்பில் அமைச்சு மற்றும் நிறுவனங்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சரவை இணை பேச்சாளரும் அமைச்சருமான கலாநிதி ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்