நிபந்தனைகளின் அடிப்படையில் அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தத்துக்கு ஆதரவு – எதிர்கட்சித் தலைவர்

நாடாளுமன்றில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற 22 ஆவது திருத்த சட்டமூலம் தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டபோதே எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ 22 ஆவது திருத்தம் தொடர்பில் மிகவும் நேர்மையாக செயற்படுவதாயின் இந்த திருத்தத்துக்கு தாம் சில நிபந்தனைகளின் அடிப்படையில் ஆதரவளிக்க தயாராக உள்ளோம் என தெரிவித்துள்ளார்.

இரட்டை பிரஜாவுரிமை தொடர்பில் 22 ஆம் திருத்த சட்டமூல வரைவில் உள்ள சரத்தில் ஒரு துளியேணும் மாற்றம் ஏற்படக்கூடாது. இதில் சிலரின் தனிப்பட்ட நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப திருத்தங்களை கொண்டுவர முயற்சித்தால் நாம் அதனை கடுமையாக எதிர்ப்போம்.

இரண்டரை வருடங்களில் நாடாளுமன்றத்தை கலைக்க ஜனாதிபதி அதிகாரம் உள்ளதாக இந்த சட்டமூல வரைவில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் எந்த மாற்றமும் ஏற்படக்கூடாது. அது அவ்வாறே இருந்தால் நாம் ஆதரவு வழங்குவோம்.அத்துடன், ஜனாதிபதியின் அதிகாரங்கள் குறைக்கப்பட வேண்டும் என்ற ஒரு கோரிக்கையையும் தாம் முன்வைப்பதாகவும் தெரிவித்தார்.

தாம் ஆராய்ந்த விதத்தில் ஓப்பீட்டளவில் 20 ஆம் திருத்தத்தை விட 22இல் சில நல்ல விடயங்கள் உள்ளன என்றும் இதில் சில மாற்றங்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன என்றும் அரசியலமைப்பு பேரவைக்கான உறுப்பினர்கள் நியமனத்தின்போது பிரதமர், எதிர்கட்சித் தலைவரின் இணக்கத்துக்கமைய தெரிவு இடம்பெறவேண்டும் என்ற நிபந்தனைகளின் அடிப்படையில் தாம் 22 ஆவது திருத்த சட்டமூலத்திற்கு ஆதரவளிக்க தயாராக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.