நீதியமைச்சர் பதவியில் தொடர முடியாது : நீதி அமைச்சர் அலி சப்ரி

ஞானசார தேரர் தலைமையிலான ஜனாதிபதி செயலணிக்குழு தொடர்ந்தும் இயங்கினால், தன்னால் நீதியமைச்சராக சேவையாற்ற முடியாது என அலி சப்ரி கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஒரு நாடு – ஒரு சட்டம் என்ற எண்ணக்கருவை முன்னெடுத்து செல்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி செயலணிக்குழுவின் தலைவராக கலகொட அத்தே ஞானசார தேரர் நியமிக்கப்பட்டமை குறித்து நீதியமைச்சர் அலி சப்ரி தனது எதிர்ப்பை அரசாங்கத்திடம் முன்வைத்துள்ளார்.

இந்த நியமனமானது அனைத்து இனங்களுக்கும் நியாயமான வகையில் செயற்பட தடையாக இருக்கும் என்பது நீதியமைச்சரின் நிலைப்பாடு எனக் கூறப்படுகிறது.

முஸ்லிம் சமூகத்தின் சமய தலைவர்களான மௌலவிகள், அமைச்சரிடம் தமது கடும் எதிர்ப்பை முன்வைத்துள்ளதை அடுத்து, அமைச்சர் தனது எதிர்ப்பை அரசாங்கத்திடம் முன்வைத்துள்ளார்.

ஞானசார தேரர் தலைமையிலான ஜனாதிபதி செயலணிக்குழு தொடர்ந்தும் இயங்கினால், தன்னால், நீதியமைச்சராக சேவையாற்ற முடியாது என அலி சப்ரி கூறியுள்ளதாக கூறப்படுகிறது.

இதனிடையே கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற ஆளும் கட்சியின் கூட்டணிக் கட்சித் தலைவர்களின் கூட்டத்திலும் பல கட்சித் தலைவர்கள், ஞானசார தேரரின் நியமனம் தொடர்பில் தமது விருப்பமின்மையை தெரியப்படுத்தியுள்ளனர்.