வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரி மட்டக்களப்பில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டது தொடர்பான தினமான இன்று புதன்கிழமை (30) மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் மட்டக்களப்பில் உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டது.

கிழக்கு மாகாணத்துக்கான பிரதான நிகழ்வு இம்முறை மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெற்றது.

இன்று காலை 10 மணியளவில் மட்டக்களப்பு, கல்லடி பாலத்தில் இருந்து ஆரம்பமான இந்த மாபெரும் கவனயீர்ப்பு போராட்ட பேரணியானது நகரின் பிரதான வீதிகள் ஊடாக சென்று, மட்டக்களப்பு காந்தி பூங்காவை அடைந்தது.

இந்நிகழ்வில் அம்பாறை, திருகோணமலை, மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் இருந்து பெருந்தொகையான காணாமல் ஆக்கப்பட்டவர்களது உறவுகள் காணாமல் போனவர்களின் புகைப்படங்கள் மற்றும் பதாகைகளை ஏந்தியவாறு இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.

காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகம் தமக்குரிய தீர்வுகளை விரைவில் தர வேண்டும் எனக் கூறியும், காலம் கடந்தும் எமக்குரிய தீர்வுகள் கிடைக்கவில்லை என தெரிவித்தும் ‘எங்கே எங்கே… காணாமல் போன உறவுகள் எங்கே’ என கோஷங்களை எழுப்பியவாறும் காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

‘எமது உறவுகள் எமக்கு வேண்டும்’, ‘மதவாதம் வேண்டாம்’ என கோஷங்களை எழுப்பியும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பெருந்தொகையான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

இன்றைய இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், மதத் தலைவர்கள், சிவில் சமூக அமைப்பினர்கள், மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், ஊடகவியலாளர் பிரதீப் எக்னெலிகொடவின் மனைவி, பொதுமக்கள், உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினம் இன்றாகும். சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு வடக்கு, கிழக்கின் பல்வேறு இடங்களில் இன்றைய தினம் கவனயீர்ப்பு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.