போராட்டக்காரர்களுக்கு எதிரான நடவடிக்கைளுக்கு விசனம் – மாற்றுக் கொள்கை நிலையம்

சுதந்திர தினத்தன்று அமைதியான முறையில் கவனயீர்ப்பு போராட்டங்களில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட தன்னிச்சையான நடவடிக்கைகள், கைதுகள் மற்றும் மிகையான அளவிலான பாதுகாப்புத் தரப்பினரின் பயன்பாடு என்பன தொடர்பில் மிகுந்த விசனமடைவதாக மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையம் தெரிவித்துள்ளது.

அண்மையில் அமைதியான முறையில் போராட்டங்களில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட தாக்குதல்கள் மற்றும் கைது நடவடிக்கைகள் என்பன தொடர்பில் தமது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தி வெளியிட்டிருக்கும் அறிக்கையிலேயே மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையம் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளது. அவ்வறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

இலங்கையின் 75ஆவது சுதந்திர தினமான பெப்ரவரி 4ஆம் திகதியன்று அமைதியான முறையில் கவனயீர்ப்பு போராட்டங்களில் ஈடுபட்டவர்களுக்கு எதிரான தன்னிச்சையான நடவடிக்கைகள், கைதுகள் மற்றும் மிகையான அளவிலான பாதுகாப்பு தரப்பினரின் பயன்பாடு என்பன தொடர்பில் நாம் மிகுந்த விசனமடைகின்றோம்.

நாடு பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கும் தற்போதைய சூழ்நிலையில் அரச சொத்துக்கள் வீண்விரயம் செய்யப்படுவது குறித்து கரிசனையை வெளிப்படுத்தி அமைதியான முறையில் சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலுகட்டாயமாக கலைக்கப்பட்டதையும் கைதுசெய்யப்பட்டதையும் ஊடக செய்திகளின் வாயிலாக ஆதாரபூர்வமாக அறியமுடிந்தது.

அமைதிவழிப் போராட்டக்காரர்கள், ஊடகவியலாளர்கள், சட்டத்தரணிகள் உள்ளிட்ட தரப்பினருக்கு எதிரான ஒடுக்குமுறைகள் மற்றும் மிகையானளவிலான படையினரின் பயன்பாடு என்பன தொடர்பில் நாம் தொடர்ச்சியாக கண்காணித்து வருவதுடன் அச்சத்தை தோற்றுவிக்கக்கூடியவாறாக மேற்கொள்ளப்படும் கைதுகள் மற்றும் ஒடுக்குமுறைகள் என்பன குறித்து கரிசனை கொள்கின்றோம்.

ஒன்றுகூடுதல், கருத்து வெளிப்பாடு ஆகியவற்றின் கூட்டாக இருக்கக்கூடிய போராட்டங்களில் ஈடுபடுவதற்கான உரிமை என்பது ஆரோக்கியமான இயங்கு நிலையில் உள்ள ஜனநாயகக் கட்டமைப்புக்கு இன்றியமையாததாகும்.

எனவே, இவ்வுரிமையை புறக்கணிப்பதென்பது இலங்கையின் சட்டத்தின் ஆட்சி மற்றும் ஜனநாயகம் ஆகியவற்றில் பாரிய தாக்கங்களை ஏற்படுத்தும் என்று அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.