பாரத பிரதமருக்கான ஆவணம் கோபால் பாக்லேயிடம் கையளிக்கப்படவுள்ளது

13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துமாறு பாரத பிரதமரை வலியுறுத்தும் ஆவணம் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேயிடம் கையளிக்கப்படவுள்ளது.

அன்றைய தினம் மாலை 5 மணிக்கு ஆவணத்தில் கையொப்பமிட்டுள்ள கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் இந்திய உயர்ஸ்தானிகருக்கும் இடையிலான சந்திப்பு தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் நியூஸ்பெஸ்ட்டுக்கு தெரிவித்தார்.

இந்த கடிதத்தை கடந்த வாரம் கையளிப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த போதிலும், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் இந்தியா சென்றிருந்தமையால் அது பிற்போடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், அவர் நாடு திரும்பியுள்ளமையால் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை இந்த ஆவணம் கையளிக்கப்படவுள்ளது.

13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துதல், தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு உள்ளிட்ட பல முக்கிய விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ள இந்த ஆவணத்தில் கையொப்பமிடுவது தொடர்பில் பல சுற்று பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன.

இறுதி வரை பேச்சுவார்த்தைகளில் கலந்துகொண்ட தமிழ் முற்போக்கு கூட்டணி, ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்பன இதில் கையொப்பமிடவில்லை.

எனினும், பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்க வேண்டும் என்ற கோரிக்கை அடங்கிய ஆவணத்தை அடுத்த கட்டமாக தயாரிக்கவுள்ளதாகவும், அதில் அந்த கட்சிகள் இணைந்துகொள்ளவுள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் நியூஸ்ஃபெஸ்ட்டுக்கு கூறினார்.