பிக்குகளிடம் பணம் வாங்கி தொல்லியல் ஆய்வு செய்ய முடியாது: ரணில் கண்டிப்பு!

தொல்லியல் இடமொன்று அடையாளம் காணப்பட்டால் அங்கு வீடு கட்டவோ, விகாரை கட்டவோ அனுமதியில்லை. நீங்கள் தனியார் துறையல்ல. பிக்குகளிடமோ வேறு எவரிடமோ பணம் பெற்று தொல்லியல் ஆய்வை செய்ய முடியாது. சிங்கள நாகரிகம் பிறந்த இடங்களில் கூட இன்னும் பணிகளை செய்யவில்லை என தொல்லியல் திணைக்களத்தின் பலவீனங்களை சுட்டிக்காட்டியுள்ளார் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க.

தொல்லியல் திணைக்களத்துடனான கலந்துரையாடலின் போதே இதனை தெரிவித்துள்ளார்.

தொல்லியல் திணைக்களம் 2000 ஏக்கர் காணியை மீட்க சென்று இருந்தது. இறுதியில் 200 ஏக்கர் மட்டுமே மிஞ்சியது. அவற்றில் 100 ஏக்கர் அளவிலேயே தேவைப்பட்டது. நாம் எவ்வாறு அந்த பணிகளை செய்வது ஒரு வருடத்தில் நாம் முன்னெடுக்கப் போகும் வேலை திட்டம் தொடர்பிலான திட்டமிடுதல் உள்ளதா இல்லையா? என்றார்.

இதற்கு பதிலளித்த தொல்லியல் திணைக்களத்தினர், எம்மிடத்தில் உள்ளது. பிரச்சினை என்னவென்றால் கடந்த 30 வருடங்களாக நாங்கள் வடக்கு கிழக்கில் பணியாற்றவில்லை. அதனால் வடக்கு கிழக்கில் பணிகளை முன்னெடுப்பதற்கு முன்னுரிமை வழங்கினோம். அதனாலேயே அப்பகுதிகளில் அதிகம் பணிகளை முன்னெடுப்பதை போன்று விளங்கியது. அதற்கான பணம் நமக்கு அரசாங்கத்திடமிருந்து கிடைக்கவில்லை. ஏனைய நிதி உதவி வழங்கும் நிறுவனங்களின் ஊடாகவே கிடைத்தது. சில நேரங்களில் பிக்குகள் வழங்குவர் என்றனர்.

இதற்கு பதிலளித்த ஜனாதிபதி, “அவ்வாறு செய்ய முடியாதல்லவா. மற்றவர்களிடம் பணத்தைப் பெற்று தேசிய கொள்கைகளை நடைமுறைப்படுத்த முடியாது. எவராவது யாழ்ப்பாணத்தில் இதனை செய்யுங்கள், கொழும்பில் இதை செய்யுங்கள் என்று கூறினால் அதனை நாம் செய்ய முடியாது அல்லவா. இதற்காக பட்ஜெட் ஊடாக கிடைக்கும் பணம் மற்றும் இ ஆர் டி மூலம் கிடைக்கும் பணத்தை மாத்திரமே பயன்படுத்த வேண்டும். வேறு எங்கிருந்தும் செய்ய முடியாது. நீங்கள் தனியார் துறையல்ல.

வடக்கை விடுங்கள். அனுராதபுரம் மகாவிகாரையில் நான் கூறியவற்றை இன்றுவரையில் செய்யவில்லை. அடுத்ததாக திம்புலாகலவில் செய்யுங்கள். மகா விகாரையிலிருந்து திம்புலாகலைக்கு சென்றதன் பின்பே தாய்லாந்து சென்றனர். மாகலவில் இன்னும் செய்யவில்லை. சிங்கள நாகரிகம் ஆரம்பித்த மல்வத்து வளாகத்தில் இன்னும் பணிகளை செய்யவில்லை.

தொல்லியல் திணைக்களத்தின் அனைத்து திட்டங்களையும் அரசாங்கத்திடம் சமர்ப்பியுங்கள். நாம் அனுமதிப்போம்.

அத்தோடு இடம் ஒன்றை கண்டுபிடித்தால் அங்கு வீடு கட்டவோ விகாரை கட்டவோ எவருக்கு அனுமதி இல்லை. அது அரசாங்க சொத்தாகும்.

வடக்கில் உள்ளவர்களையும் நான் அறிவுறுத்தியுள்ளேன். அவர்கள் அது பற்றி பார்த்துக் கொள்வதாக உறுதி அளித்துள்ளனர். அவர்கள் பார்த்துக் கொள்வதாயின் பிரச்சனைகள் இல்லை அல்லவா. அவர்கள் பார்த்துக் கொள்ள தவறினால் நாம் போலீசாரை அனுப்பி அந்த பணிகளை செய்வோம். அரசாங்கத்தினால் அதனை கண்காணிக்க முடியும். மாகாண சபைகளுடன் இணைந்து பணிகளை செய்வதாக கூறுவோம். எவரேனும் அவற்றை உடைக்க வந்தால் இராணுவத்தையும் போலீசாரையும் அனுப்பி பாதுகாப்போம். பிக்குகளாலும் அதனை பாதுகாக்க முடியாது என்றார்.