தமிழ் தேசியத்திற்காய் அஞ்சாது ஒலித்த குரல் மெளனித்து விட்டது. அதி வணக்கத்துக்குரிய ஓய்வுநிலை ஆண்டகை இராயப்பு யோசப்பு அவர்கள் தனது எண்பதாவது வயதில் பூவுடல் நீத்து புகழுடல் எய்தியுள்ளார்.
தமிழினத்தின் விடிவுக்காய் உரிமைக்காய் தொடர்ந்தும் அஞ்சாது குரல் கொடுத்து வந்த மாமனிதரின் மறைவு தமிழ் மக்களைப் பெரும் கவலை கொள்ள வைத்திருக்கிறது.
யுத்த காலத்திலே எம்மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகளை துணிச்சலோடு எதிர் கொண்டதோடு மாத்திரமல்லாமல் சர்வதேச அரங்கில் எடுத்துரைத்தார். தானே அதற்கு சாட்சியமாக ஆதாரங்களை பதிவு செய்தவர். அன்னை மடுமாதாவின் ஆலய வளாகத்தை யுத்த சூனியப் பிரதேசமாக பிரகடனம் செய்து பல்லாயிரக்கணக்கான தஞ்சமடைந்த மக்களை பாதுகாத்தவர். எமது இனம் அடக்கப்பட்டு ஒடுக்கப்பட்டு வருகிறது, எங்கள் இனத்திற்கான விடுதலை அவசியம் என்பதை தெள்ளத்தெளிவாக சர்வதேசத்திற்கும் தொடர்ந்து வந்த அரசாங்கங்களுக்கும் துணிச்சலோடு எடுத்துக்கூறிய பெருந்தகை.
அரசியல் கட்சிகள் தனித்து பயணிப்பதை விட ஒன்றிணைவதன் அவசியத்தை வலியுறுத்தி அத்தோடு அவர்கள் ஒன்று படுவதற்காகவும் அரும்பாடுபட்டவர். விடுதலை இயக்கங்களுக்கு இடையில் இருந்த முரண்பாடுகளை தணித்து அவர்களுக்குள்ளே ஒரு சமாதான சூழ்நிலை ஏற்படுத்துவதற்கு பெரிதும் முயன்று வெற்றி கண்டவர். இறுதி வரைக்கும் பிரிந்து நிற்கும் தமிழ்த் தேசிய கட்சிகள் இணைய வேண்டும் என்ற செய்தியை வலியுறுத்தி வந்ததோடு மாத்திரமல்லாமல் அதனை நடைமுறைப்படுத்துவதற்கான சகல முயற்சிகளையும் எடுத்தவர்.
இன்றுள்ள ஜனாதிபதி யுத்த காலத்தில் பாதுகாப்பு செயலராக கடமையாற்றிய பொழுது ஆண்டகை எமது தலைவர் செல்வம் அடைக்கலநாதன் அவர்களோடு பாதுகாப்புச் செயலாளரை சந்திப்பதற்கான ஏற்பாட்டினை முன்னெடுத்து அவர் அலுவலகத்திலேயே நேரடியாகச் சென்று தமிழ் மக்களுக்கு எதிராக யுத்த அத்துமீறல்கள் மனித உரிமை குற்றங்கள் புரியப் படுவதாகவும் இதை கண்டிப்பதாகவும் உடனடியாக முடிவிற்கு கொண்டு வரவேண்டும் என நேரடியாக கண்டித்தவர். அந்தக் கணத்தில் துளியளவும் விட்டுக் கொடுப்பில்லாமல் துணிச்சலோடு செயலாளர் அதிர்ந்து போகும் அளவிற்கு தன்னுடைய கருத்தினை உறுதியாக முன்வைத்தவர்.
அதோடு நின்றுவிடாது எமது மக்களுடைய கைப்பற்றப்பட்ட காணிகளை விடுவிப்பதற்கும் மறுவாழ்வு மீள்குடியேற்றத்தை உறுதிப்படுத்துவதற்கும் அயராது சர்வதேச சமூகத்தோடும் அரசியல் தலைவர்களோடும் தொடர்ந்து முன்னின்று உழைத்தவர். தமிழ் இனத்திற்காக, மதக் கோட்பாடுகளையும் கடந்து அயராது குரல் கொடுத்து வந்த அன்னார் இன்று எம்மை விட்டு பிரிந்தாலும் தொடர்ந்து தமிழ் மக்களின் மனதில் வாழ்ந்து கொண்டே இருப்பார் என்பதில் ஐயமில்லை.
அன்னாரின் ஆத்மா இறைவனடியில் சாந்தி அடையப்பிரார்த்திக்கிறோம். அன்னாருக்கு தமிழீழ விடுதலை இயக்கத்தின் சார்பில் இதயபூர்வமான அஞ்சலிகள்.
ஊடக வாரியம்
தமிழ் ஈழ விடுதலை இயக்கம் – ரெலோ