புதிய பிரதமர் தெரிவு செய்யப்பட்டாலும் ஜனாதிபதி வீட்டுக்கு செல்லாத வரை தொடர்ந்து இந்த குழப்பம் இருக்கும் -ரெலோ தலைவர் செல்வம் எம்பி

புதிய பிரதமர் தெரிவு செய்யப்பட்டாலும் ஜனாதிபதி வீட்டுக்கு செல்லாத வரை தொடர்ந்து இந்த குழப்பம் இருக்கும் என வன்னி பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

புதிதாக பிரதமர் பதவியேற்றது தொடர்பாக கருத்து தெரிவித்த போதே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

புதிய பிரதமர் தெரிவு செய்யப்பட்டிருக்கிறார். இந்த விடயத்தில் மக்கள் எதிர்ப்பு இருக்கிறதற்கு காரணம் கோட்டா கோ கோம் என்ற அடிப்படையில் ஜனாதிபதி இதற்குள்ளே இருந்து கொண்டு தன்னுடைய பரிவாரங்களை தெரிவு செய்திருக்கின்ற ஒரு சூழலை மக்கள் எதிர்க்கிறார்கள்.

அந்தவகையிலே புதிய பிரதமராக தெரிவு செய்து அடுத்த அமைச்சரவை அவர்களுடைய சகாக்களாக இருக்கின்ற சூழல் ஏற்படும். அதனால் மக்கள் எதிர்க்கின்ற வாய்ப்பு இருக்கிறது.

ஜனாதிபதி அவர் கூறியது போல 19 ஆவது திருத்த சட்டத்தை பாராளுமன்றிற்கு அதிகாரங்களை கொடுக்கின்ற வகையிலே அதனை செய்து பாராளுமன்றத்திற்கு அதிகாரத்தை கொடுத்துவிட்டு அவர் வீட்டுக்கு செல்ல வேண்டும். அப்படி செல்கின்ற போது தான் மக்கள் ஜனநாயக முறையான பாராளுமன்றத்திற்கு ஆதரவை தருகின்ற வாய்ப்பு ஏற்படும்.

ஆகவே ஜனாதிபதி வீட்டுக்கு செல்லாத வரைக்கும் தொடர்ந்து இந்த குழப்பம் இருக்க தான் செய்யும். அவர் 19 ஆவது திருத்த சட்டத்தை அல்லது 21 என்ற அடிப்படையில் பாராளுமன்றத்திற்கு அதிகாரத்தை தந்து அந்த பதவியிலிருந்து விலகி செல்லுகின்ற சூழல் உருவாகும் மட்டும் இந்த பிரச்சினை தொடர்ச்சியாக இருக்கும் என்று தான் கூற முடியும்.

ஏனென்றால் மக்கள் கோருவது மகிந்த ராஜபக்ஷ பரிவாரங்கள் இருக்க கூடாதென. அந்த சூழலில் தான் மக்கள் பார்க்கின்றார்கள். அந்தவகையில் ஜனாதிபதி இருக்கும் வரைக்கும் இந்த எதிர்ப்பு தொடர்ச்சியாக இருக்கும் என மேலும் தெரிவித்தார்.