பூகோள அரசியல் மோதலில் சிக்கும் இலங்கை?

சீன ஆய்வுக் கப்பல் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வருகை தரவுள்ளமை தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கவனத்திற்கு இந்தியா கொண்டு வந்துள்ளதாக The Hindu இன்று செய்தி வௌியிட்டுள்ளது.

இந்த கப்பல் தொடர்பில் இந்தியா தௌிவான தகவலை வழங்கியிருந்த போதிலும், இலங்கை பாதுகாப்பு அமைச்சு கப்பலின் வருகையை உறுதிப்படுத்தியமையினால் இந்தியா இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Yuan Wang 5 கப்பல் சீன இராணுவத்தின் மூலோபாய ஆதரவுப் படைக்கு சொந்தமான செய்மதிகள், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை கண்காணிக்க பயன்படுகிறது.

இந்தியா இதனை சீன உளவு பார்க்கும் கப்பல் என தெரிவித்துள்ளது.

2014 ஆம் ஆண்டு ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வந்த நீர்மூழ்கிக்கப்பலை விட இது ஆபத்தானது என இந்தியாவின் Economic Times இணையத்தளம் செய்தி வௌியிட்டுள்ளது.

Yuan Wang 5 கப்பல் மூலம் 750 கிலோமீட்டர் தூரத்திலுள்ள இடங்கள் தொடர்பிலான தரவுகளை பெற்றுக்கொள்ள முடியும்.

இதன்மூலம் இந்தியாவின் தெற்கு பிரதேசத்தின் பாதுகாப்பு நிலையங்கள், ஆறு துறைமுகங்கள் தொடர்பிலான தகவல்களை பெற்றுக்கொள்ள முடியுமென Economic Times வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கல்பாக்கம் அணுமின் நிலையம், கூடங்குளம் அணுமின் நிலையம், கொச்சியில் உள்ள தெற்கு கடற்படை முகாம் உள்ளிட்ட முக்கிய இடங்களும் இதில் அடங்குகின்றன.

இதன் காரணமாக சீன ஆய்வுக் கப்பலை இந்தியா மிகவும் ஆபத்தானது என்றே கூறுகின்றது.

இந்த விடயம் தொடர்பில் இந்தியா அதிக கவனம் செலுத்தியுள்ளதாக The Hindu செய்தி வௌியிட்டுள்ளது.

Yuan Wang 5 கப்பல் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வரவுள்ள விடயம் குறித்து கடந்த வாரம் ஊடங்கள் மூலம் தகவல் வௌியானதும், அதனை பாதுகாப்பு அமைச்சு நிராகரித்ததாகவும் பின்னர் ஆகஸ்ட் 11 ஆம் திகதியில் இருந்து 17 ஆம் திகதி வரை இந்த கப்பலுக்கு ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வருவதற்கு அனுமதி வழங்கியுள்ளமை உறுதியாகியுள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வௌியிட்டிருந்தன.

இதேவேளை, தாய்வானை அடிப்படையாகக் கொண்டு சீனா – அமெரிக்கா இடையில் முரண்பாடுகள் ஏற்பட்டு வரும் நிலையிலேயே இந்திய – சீன சமுத்திர நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

அமெரிக்க பாராளுமன்ற சபாநாயகர் Nancy Pelosi-யின் தாய்வான் விஜயத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த முரண்பாடு ஏற்பட்டுள்ளது.

தமது நிர்வாகத்தின் கீழ் உள்ள பகுதியாக சீனா தாய்வானை கருதுவதுடன், அமெரிக்கா தமது எதிர்ப்பையும் கருத்திற்கொள்ளாமல் செயற்பட்டால் ஆபத்துகள் ஏற்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.

எவ்வாறாயினும், மலேஷியாவிற்கான விஜயத்தை நிறைவு செய்த அமெரிக்க பாராளுமன்ற சபாநாயகர் இன்று இரவு 10.30-க்கு தாய்வானை சென்றடையவுள்ளார்.

தாய்வானை அடிப்படையாகக் கொண்டு ஏற்பட்டுள்ள இந்த முரண்பாடு காரணமாக அமெரிக்கா தமது பிரதான மூன்று யுத்த கப்பல்களை தாய்வானின் மேற்கு கடற்பகுதியில் நிறுத்தியுள்ளது.

தாக்குதல் கப்பல்களான USS, Ronald Reagan, Abraham Lincoln, USS Tripoli ஆகிய கப்பல்களே அவையாகும்.

அத்துடன், சீனாவும் தமது தாக்குதல் கப்பல்களை தென் சீன கடல் எல்லை , அதனை அண்டிய பகுதிகளில் நிலை நிறுத்தியுள்ளதுடன், யுத்தம் ஏற்பட்டால் அதற்கு பதில் வழங்க தயார் எனவும் கூறியுள்ளது.

தாய்வானை அடிப்படையாகக் கொண்டு இவ்வாறான நெருக்கடி ஏற்பட்டு வரும் நிலையில், ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வருதற்கு தயாராகும் சீன கப்பல் தொடர்பில் இந்திய வௌிவிகார அமைச்சின் பேச்சாளரும் அண்மையில் கருத்துத் தெரிவித்திருந்தார்.

இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் பொருளாதார பாதுகாப்பிற்காக மேற்கொள்ள முடியுமான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பதாக அவர் கூறியிருந்தார்.

இராஜதந்திர ரீதியில் பிரச்சினைகளை நிவர்த்திக்கும் அளவிற்கு இந்தியாவும் சீனாவும் இந்த நெருக்கடி நிலைமையில் நெகிழ்வுடன் செயற்படுமா?

இந்தியா தமது தேசிய பாதுகாப்பிற்கு பாரிய அச்சுறுத்தல் ஏற்படும் என கருதும் விடயத்தினை இலங்கை கடற்பரப்பில் இடம்பெறுவதற்கு இடமளிக்குமா?

சீனா தமக்கு சொந்தமான ஹம்பாந்தோட்டை துறைமுகத்தின் செயற்பாடுகளுக்கு மற்றுமொரு நாடு அழுத்தம் விடுக்கும்போது மௌனம் காக்குமா?

தமக்குத் தேவையானவாறு வௌிநாடுகளுடன் செய்துகொண்ட கொடுக்கல் வாங்கல்கள் காரணமாகவே இன்று இந்த பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன.

SEA OF SRI LANKA எனப்படும் இலங்கை கடலுக்கு நேரடியாக பாதிப்பு ஏற்படுத்தும் தீர்மானங்களை எடுத்தமையினால் இரண்டு நாடுகளுக்கு இடையிலான பிரச்சினையின் போது தலையிட வேண்டி ஏற்பட்டுள்ளதல்லவா?

தாய்வானைப் போன்று இலங்கையும் பூகோள அரசியல் மோதலில் சிக்காமல் இருப்பதற்கு தற்போதேனும் கொள்கை ரீதியிலான தீர்மானங்கள் எடுக்கப்படுமா?

எமது நாடு பெரும் பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியுள்ள நிலையில், இன்னுமொரு நெருக்கடியும் ஏற்பட்டுள்ளதை நாம் மறந்துவிடக்கூடாது.