பொறுப்பற்ற செய்திகளுக்கு சம்பந்தர் ஐயா கருத்து தெரிவிப்பது வருத்தமளிக்கிறது- ரெலோ தலைவர் செல்வம்

வீரகேசரி தேசிய பத்திரிகையில் வெளியிடப்பட்டுள்ளதாக கூட்டமைப்பின் தலைைர் சம்பந்தன் ஐயா தெரிவித்த கருத்து முற்றிலும் கவலைக்குரியது.
ஜனாதிபதியின் சந்திப்பு சம்பந்தமாக எமது கடிதத்தில் குறிப்பிடப்பட்ட விடயங்களைத் தவிர வேறு எவையும் ஊடகங்களுக்கு தெரிவிக்கப்படாத நிலையில், பொறுப்பற்ற முறையில் உண்மைக்குப் புறம்பான கருத்தை ஊடகச் செய்தியாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளமை அவதானிக்க முடிகிறது. அதுவும் பாராளுமன்றக் குழு கூட்டத்தில் “திட்டமிடாமல் ஜனாதிபதியை சந்திக்க செல்லக் கூடாது என்ற கருத்தை நான் தெரிவித்திருப்பதாக” ஊடகவியலாளர் கூறியிருப்பது பொறுப்பற்றதும் உண்மைத் தன்மை அற்றதுமாகும்.

அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் யாராவது குழப்பம் ஏற்படுத்தும் நோக்கத்துடன் ஊடக செய்தியாளருக்கு கருத்து தெரிவித்து இருந்தால் அதறகு நான் பொறுப்பாளியாக முடியாது.

பாரம்பரியமான தேசிய ரீதீயாக மக்கள் மதிப்பையும் நம்பிக்கையையும் பெற்ற தமிழ் பத்தி்ரிகை ஊடகம் ஒன்றில் பொறுப்பற்ற முறையில் உண்மைக்குப் புறம்பான சொல்லப்படாத கருத்துக்களையும் பதிவு செய்த ஊடகவியலாளரின் செயல்பாடு கவலை அளிக்கிறது. அப்படிப்பட்டவர்களுடைய செய்திகளுக்கு செவி சாய்த்து சம்பந்தன் அவர்கள் கருத்து தெரிவித்திருப்பது மேலும் கவலையளிக்கின்றது.

ஜனாதிபதியை கட்சிகள் சந்திப்பது அந்தந்த கட்சிகளின் தீர்மானம். எமது கட்சியின் நிலைப்பாட்டை தெளிவாக எழுத்து வடிவத்தில் நேரடியாக சம்பந்தன் அவர்களுக்கு அறிவித்திருந்த நிலையில் பொறுப்பற்ற ஊடகவியலாளர் ஒருவரின் கருத்துக்களுக்கு மதிப்பளித்து பதில் வழங்குவதில் அவதானம் கொள்ள வேண்டும் என்று, மிக நீண்ட காலமாக அவருடன் பயணிப்பவனாக, என்னை நன்கு அறிந்தவர் என்ற நம்பிக்கை இன்றுவரை கொண்டவனாக அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

செல்வம் அடைக்கலநாதன்
தலைவர் – ரெலோ
தமிழ் தேசியக் கூட்டமைப்பு