நாட்டில் பெற்றோல் , டீசல் உள்ளிட்ட எரிபொருட்கள் மற்றும் சமையல் எரிவாயு உள்ளிட்டவற்றுக்கு நிலவும் தட்டுப்பாடு தொடர்ந்து கொண்டிருக்கிறது.
எதிர்வரும் நாட்களில் இந்த நெருக்கடிகளுக்கு தீர்வு கிட்டும் என்று பொறுப்பு கூற வேண்டிய தரப்பினர் தெரிவித்த போதிலும் , நாடளாவிய ரீதியில் எரிபொருட்களை பெற்றுக் கொள்வதற்காக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதை அவதானிக்க முடிகிறது.
மீண்டும் எரிபொருள் விலை அதிகரிப்பு
இவ்வாறான நிலையில் வியாழக்கிழமை நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் ஐ.ஓ.சி. நிறுவனம் எரிபொருள் விலையை அதிகரித்துள்ளது.
அனைத்து வகையான டீசலின் விலைகளை 75 ரூபாவாலும் , அனைத்து வகையான பெற்றோலின் விலைகளை 50 ரூபாவாலும் அதிகரித்துள்ளதாக ஐ.ஓ.சி. நிறுவனம் அறிவித்துள்ளது.
கடந்த பெப்ரவரி 24 ஆம் திகதி ஒரு லீற்றர் டீசலின் விலை 15 ரூபாவாலும் , ஒரு லீற்றர் பெற்றோல் விலை 20 ரூபாவாலும் ஐ.ஓ.சி. அதிகரித்தது.
பெப்ரவரியில் இரண்டாவது தடவையாக இவ்வாறு எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டது. அதற்கு முன்னர் பெப்ரவரி 6 ஆம் திகதியும் ஐ.ஓ.சி. நிறுவனம் எரிபொருள் விலையை அதிகரித்தமை குறிப்பிடத்தக்கது.
தொடரும் சமையல் எரிவாயு தட்டுப்பாடு
நாட்டில் நிலவும் டொலர் நெருக்கடியின் காரணமாக இறக்குமதி நிறுவனங்களுக்கு கடன் கடிதங்கள் விடுவிக்கப்படாமையின் காரணமாக கடந்த இரு வாரங்களாக சமையல் எரிவாயுவிற்கு பாரிய தட்டுப்பாடு நிலவுகிறது.
இதனால் நாடளாவிய ரீதியிலுள்ள பல உணவகங்களுக்கும் , பேக்கரிகளும் , சிற்றுண்டிசாலைகளும் மூடப்பட்டுள்ளன.
இந்நிலையில் சமையல் எரிவாயு விநியோகத்தை ஆரம்பித்துள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.
எரிவாயு இறக்குமதிக்கான கொடுப்பனவுகள், கடன் கடிதங்களை விடுவித்துக் கொள்வதில் காணப்பட்ட சிக்கல்களுக்கு தீர்வு காணப்பட்டதையடுத்து எரிவாயு விநியோக நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய நேற்றிலிருந்து கெரவலப்பிட்டி லிட்ரோ எரிவாயு சேமிப்பு முனையத்திலிருந்து இறக்குதல் , நிரப்;புதல் மற்றும் விநியோகம் ஆகியவை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வாகனங்களின் வரிசைகளில் மாற்றம் இல்லை
பெற்றோல் மற்றும் டீசல் உள்ளிட்ட எரிபொருள் தட்டுப்பாட்டுக்கு கடந்த திங்கட்கிழமை முதல் தீர்வு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்ட போதிலும் , எரிபொருள் நிரப்பும் நிலையங்களுக்கு முன்னாள் வாகனங்கள் நீண்ட வரிசை இன்னும் குறைவடையவில்லை.
நாட்டின் சில பிரதேசங்களில் நள்ளிரவு வேளைகளிலும் வாகனங்கள் எரிபொருளுக்காக காத்திருப்பதை அவதானிக்க முடிகிறது. சுமார் இரு கிலோ மீற்றரை விட நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.
‘எரிபொருள் விலை 254 ரூபாவாகக் காணப்படுகிறது. நாம் எவ்வாறு வாழ்க்கையைக் கொண்டு செல்வது?’ , ‘மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு நடந்து செல்வதே பொறுத்தமானதமாக இருக்கும்’ , ‘நாட்டின் பொருளாதாரத்தை முறையாக முகாமைத்துவம் செய்யாமையே இதற்கான காரணமாகும்.’ , ‘இதே போன்ற ஆட்சி தொடர்ந்தால் யுத்தத்தை விட மோசமான நிலைமையே ஏற்படும்.’ என்று வாகனங்களில் வரிசையில் காத்திருந்த சாரதிகள் விசனம் வெளியிட்டனர்.
பொதுமக்கள் அசௌகரியம்
சமையல் எரிவாயுவை பெற்றுக் கொள்ள முடியாமையால் ஹோட்டல் உரிமையாளர்கள் மாத்திரமின்றி சாதாரண மக்களின் அன்றாட நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக கொழும்பு உள்ளிட்ட பெருநகர்ப்பகுதிகளில் தொடர்மாடி குடியிருப்புக்களில் வாழும் மக்களே இதனால் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தொடர்மாடி குடியிருப்புக்களில் மண்ணெண்ணெய் அடுப்பு மற்றும் விறகு அடுப்பு பாவனைக்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது என்பதால் இந்த மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அத்தியாவசிய பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளமையால் உணவு விலைகளும் அதிகரித்துள்ளன. இதன் காரணமாக சமைத்த உணவை கொள்வனவு செய்வதிலும் மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அது மாத்திரமின்றி புறநகர் பகுதிகளில் சுற்றுலாத்துறையுடன் தொடர்புடைய தொழிலில் ஈடுபட்டுள்ள மக்களும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
எரிவாயு இன்மையின் காரணமாக விறகு அடுப்புக்களில் உணவை சமைப்பதால் , சில சந்தர்ப்பங்களில் புகை மணம் வருவதால் சுற்றுலாப்பயணிகள் உணவை வாங்குவதில் பின்வாங்குவதாக சுற்றுலாத்தொழிலாளர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.