மனித உரிமைகளை உறுதி செய்வதை முன்னிறுத்தி செயற்பட்டால் ஆதரவை வழங்கத்தயார் – பிரித்தானியா

இலங்கையில் அனைத்துப் பிரஜைகளுக்குமான மனித உரிமைகளை உறுதி செய்வதை முன்னிறுத்தி செயற்பட்டால் தாம் ஆதரவை வழங்கத்தயார் என பிரித்தானியா தெரிவித்துள்ளது.

மேலும் போர் முடிவிற்குக் கொண்டுவரப்பட்ட பின்னர் சமாதானத்தையும் பொறுப்புக்கூறலையும் நல்லிணக்கத்தையும் சமூகங்களுக்கு இடையிலான ஒற்றுமையையும் உறுதிப்படுத்துவதற்கான ஜெனீவாவின் நடவடிக்கையை உறுதிப்படுத்துமாறு பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி விவகாரங்களுக்குப் பொறுப்பான அமைச்சர் தாரிக் அஹமட் தெரிவித்துள்ளார்.

வர்த்தகம், முதலீடு மற்றும் பரஸ்பர பாதுகாப்பு ஆகியவற்றில் இந்திய – பசுபிக் பிராந்தியத்தின் முக்கியத்துவம் குறித்து பிரித்தானியா விசேட கவனம் செலுத்தியுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அதன் தொடர்ச்சியாக பிரித்தானியா, பொருளாதார ரீதியான தொடர்புகளை அடிப்படையாகக் கொண்ட வலையமைப்பை கட்டியெழுப்பி வருவதாகவும் இவ்விடயத்தில் இலங்கையுடன் ஒன்றிணைந்து செயற்படுவதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் கூறினார்.

காலநிலைமாற்ற சவால்களைக் குறைப்பதற்கும் சூழலைப் பாதுகாப்பதற்கும் இலங்கையினால் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு அவசியமான உதவிகளை வழங்குவதற்கும் தாம் தயார் என்றும் பிரித்தானியா அறிவித்துள்ளது.

புதியதொரு பொருளாதாரக் கட்டமைப்பை உருவாக்கவும் நிதிச்சேவை வழங்கல் துறையை அபிவிருத்தி செய்யவும் வர்த்தக மற்றும் முதலீட்டுத் தொடர்புகளை விரிவுபடுத்தவும் இலங்கைக்கு முழுமையான ஒத்துழைப்புக்களை வழங்குவோம் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.