மனித உரிமைகள் மற்றும் பொறுப்புக்கூறலை ஆதரிக்கும் – பிரித்தானியா அறிவிப்பு

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கையின் மனித உரிமைகள் மற்றும் பொறுப்புக்கூறலை அடிப்படையாகக் கொண்டு தொடர்ந்து செயற்படத் தயாராக இருப்பதாக பிரித்தானியா தெரிவித்துள்ளது.

ஜெனீவாவில் உள்ள ஐ.நாவின் நிரந்தர பிரதிநிதி ஜூலியன் பிரத்வைட், இலங்கை தொடர்பான புதிய ஐ.நா மனித உரிமைகள் அறிக்கையையும் இங்கிலாந்து பரிசீலிக்கும் என கூறியுள்ளார்.

மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்லெட் சமர்ப்பிக்கவிருக்கும் 16 பக்கங்கள் கொண்ட முழுமையான அறிக்கை நேற்று வெளியான நிலையில் இதுகுறித்து டுவிட்டரில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அதில்” இலங்கை தொடர்பாக ஐ.நா.மனித உரிமைகள் பேரவையினால் வெளியிடப்பட்டிருக்கும் மிக முக்கியமான புதிய அறிக்கை குறித்து நாம் அவதானம் செலுத்தியிருக்கிறோம்.

எதிர்வரும் ஜெனிவா கூட்டத்தொடரின் போது இலங்கையில் மனித உரிமைகளையும் பொறுப்புக்கூறலையும் உறுதிப்படுத்துவதை முன்னிறுத்தி பிரித்தானியா ஆதரவு வழங்கும்” என பதிவிட்டுள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46ஆவது கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பாக ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்லெட்டின் புதிய அறிக்கையில் பல பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் அமுல்படுத்துவதற்கு இலங்கை தவறும் பட்சத்தில், மாற்று யோசனைகளை நடைமுறைப்படுத்தத் தயாராக இருப்பதாக அமெரிக்கா எச்சரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.