மறைந்த தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவர் சிறீ சபாரத்தினத்தின் 35 ஆம் ஆண்டு நினைவேந்தல் தின நிகழ்வு அவரை சுட்டுப் படுகொலை செய்த இடமான யாழ்.கோண்டாவில் அன்னங்கை தோட்ட வெளியில் இன்று வியாழக்கிழமை(06-05-2021) ரெலோ யாழ் மாவட்ட தலைவரும் வலி கிழக்கு தவிசாளருமானா நிரோஜ் தலைமையில் நடைபெற்றது.
மறைந்த தலைவர்,போராளிகள்,பொதுமக்கள் ஆகியோருக்கு இரண்டு நிமிட மெளன அஞ்சலி இடம்பெற்றதைத் தொடர்ந்து,தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் பொதுச்சுடர் ஏற்றி வைத்து எழுச்சி தினம் ஆரம்பமானது,தலைவர் சிறீ சபாரத்தினத்தின் உருவப்படத்திற்கு ரெலோ பேச்சாளர் சுரேந்திரன்,செயலாளர் நாயகம் கருணாகரம்,பொருளாளர் விந்தன் கனகரத்தினம் மலர் மாலை அணிவித்தார்கள்.
நினைவுரைகள் இடம்பெற்றன. நினைவுரைகளின் இறுதியாக கட்சியின் கிழக்கு மாகாணப் பாராளுமன்ற உறுப்பினர்களான ரெலோ செயலாளர் நாயகம் கருணாகரம்,தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைமை குழு உறுப்பினரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வினோ நோதரலிங்கம் உரையாற்றிக் கொண்டிருந்தார்.
குறித்த நினைவேந்தல் தின நிகழ்வு முடிவடையும் தருவாயில் கோப்பாய்ப் பொலிஸார் சம்பவ இடத்திற்கு வந்தமையால் அப்பகுதியில் திடீர் பரபரப்புத் ஏற்பட்டது.
இந்நிலையில் அங்கு வந்த கோப்பாய்ப் பொலிஸ் நிலைய அதிகாரிகள் குறித்த நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றுகின்றனரா? என நன்கு நோட்டமிட்டதுடன் தற்போதைய கொரோனாத் தொற்று நிலைமை காரணமாக அப்பகுதியில் நீண்ட நேரம் ஒன்றுகூடியிருக்க வேண்டாம் எனவும் அறிவுறுத்தினர்.
அஞ்சலி நிகழ்வில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், வினோ நோகராதலிங்கம், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள், உள்ளூராட்சிமன்ற தலைவர் மற்றும் உறுப்பினர்கள், கட்சியின் ஆதரவாளர்கள் என்போர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.