மாகாணசபை தேர்தல் தொடர்பில் சிறந்த தீர்மானம் வெகுவிரைவில் அறிவிக்கப்படும்.
எதிர்வரும் காலங்களில் இடம்பெறவுள்ள தேர்தல்களை கருத்திற் கொண்டு நாடுதழுவிய ரீதியில் இனி செயற்பாட்டு அரசியலில் ஈடுப்படுவோம் என மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சிமன்றங்கள் இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்தார்.
மாகாண சபை தேர்தல் தொடர்பில் வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
தேர்தல் முறைமை தொடர்பில் அனைத்து அரசியல் கட்சிகளின் கருத்துக்களுக்கும் மதிப்பளிக்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்கு உண்டு.
2018ஆம் ஆண்டு இடம்பெற்ற உள்ளுராட்சி தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன வெற்றிப் பெற்றதை தொடர்ந்து அரசாங்கம் திட்டமிட்ட வகையில் மாகாண சபை தேர்தல் முறைமையை மாற்றியமைத்து தேர்தல் முறைமையில் சிக்கல் நிலைமையை தோற்றுவித்து தேர்தலை பழைய தேர்தல் முறையிலும், புதிய தேர்தல் முறையிலும் நடத்த முடியாத சிக்கல் நிலைமையை உருவாக்கியது.
இனப்பிரச்சினைக்கு தீர்வாக மாகாண சபை முறைமை அறிமுகப்படுத்தப்பட்டது.
ஆகவே மாகாண சபை தேர்தலை அரசாங்கம் விரைவாக நடத்த வேண்டும் என தற்போது அரசாங்கத்திற்கு அழுத்தம் பிரயோகிக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பு உட்பட தமிழ் தலைமைகள் நல்லாட்சி அரசாங்கத்தில் மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கு ஆரோக்கியமான நடவடிக்கைளை முன்னெடுக்கவில்லை.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தில் மாகாணசபை தேர்தலை நடத்த பல்வேறு முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
மாகாணசபை தேர்தல் தொடர்பில் வெகுவிரைவில் சிறந்த தீர்மானம் அறிவிக்கப்படும்.எதிர்வரும் காலங்களில் இடம்பெறவுள்ள தேர்தல்களை கருத்திற் கொண்டு நாடுதழுவிய ரீதியில் இனி செயற்பாட்டு ரீதியிலான அரசியலில் ஈடுப்படுவோம் என்றார்.