கடந்த ஞாயிற்றுக்கிழமை(20.03) அன்று சிறீலங்காவின் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ யாழ்ப்பாணம் வந்தபோது, தங்கள் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் உண்மை நிலையை அறியும் முகமாக கவனயீர்ப்பு போராட்டத்தை நடாத்த முற்பட்ட தாய்மார்கள, வயோதிபப் பெண்கள் மீது சிறீலங்காவின் காவற்துறையினர் மிலேச்சத்தனமான தாக்குதலை நடாத்தி அவர்களைக் காயப்படுத்தியமையை பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கம் மிகவும் வன்மையாகக் கண்டிக்கின்றது.
அத்துடன் இச்சம்பவத்தைக் கண்டித்தும் தங்களுக்கு நீதி கிடைக்க வேண்டியும் வடக்கு கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கம் மாபெரும் கண்டன போராட்டத்தை எதிர்வரும் 03.04.2022 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு யாழ் மத்திய பேரூந்து நிலையத்தில் நடாத்த இருப்பதை நாம் வரவேற்கின்றோம்.
மேலும் நீதிக்கான இப்போராட்டத்தில் மக்கள் இயக்கங்கள், சிவில் அமைப்புக்கள், மதத்தலைவர்கள், தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகள், மகளிர் அமைப்புக்கள், பல்கலைக்கழக மாணவர்கள், இளைஞர் அமைப்புக்கள், வர்த்தகர் சங்கங்கள், கிராமமட்ட அமைப்புக்கள், அரசசார்பற்ற நிறுவனங்கள், மீனவர் சம்மேளனங்கள், தனியார் போக்குவரத்து சங்கங்கள், முச்சக்கரவண்டிச் சங்கங்கள், விவசாய அமைப்புகள், ஆசிரியர் சங்கங்கள், பல்கலைக்கழக ஊழியர் சங்கங்கள், ஊடகவியலாளர்கள் என அனைத்து அமைப்புக்களையும் மக்களையும் பெரும் எழுச்சியாக பங்குபற்றுமாறு பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கம் அன்புரிமையுடன் அழைத்து நிற்கின்றது.