மிருசுவிலில் 8 தமிழர்கள் படுகொலை: கொலையாளி சிப்பாயை மன்னித்த கோட்டாவுக்கு உயர்நீதிமன்றம் அழைப்பாணை

கடந்த 2000ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் மிரிசுவில் பகுதியில் இடம்பெயர்ந்த 5 வயதுக் குழந்தை உட்பட 8 பேர் வெட்டியும், சுட்டும் கொல்லப்பட்ட கொடூர குற்றத்திற்காக கொழும்பு மேல் நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்ட இராணுவ சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்கவை ஜனாதிபதி மன்னிப்பில் விடுவித்தமை தொடர்பில் நீதிமன்றில் தனது தரப்பு உண்மைகளை முன்வைக்குமாறு கோரி அவருக்கு அழைப்பாணை அனுப்புமாறு உயர் நீதிமன்றம் இன்று (17) உத்தரவிட்டுள்ளது.

மாற்றுக் கொள்கை மையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்துவினால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனு இன்று யசந்த கோதாகொட மற்றும் அச்சல வெங்கப்புலி ஆகியோர் அடங்கிய உயர் நீதிமன்ற அமர்வு முன்னிலையில் அழைக்கப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மனு அழைக்கப்பட்ட நேரத்தில், மனுதாரர் தரப்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், இந்த மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் ஜனாதிபதியின் மன்னிப்பின் பின்னர் விடுவிக்கப்பட்ட இராணுவ சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்க ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்புமாறு நீதிமன்றில் கோரினார்.

இந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் குழாம், சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கியது தொடர்பில், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டது.

அத்துடன், மனுவில் பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டு ஜனாதிபதியின் பொது மன்னிப்பில் விடுவிக்கப்பட்ட இராணுவ சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்கவுக்கு நோட்டீஸ் அனுப்பவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதன்பின், உண்மைகளை உறுதிப்படுத்துவதற்காக சம்பந்தப்பட்ட மனுவை செப்டம்பர் 4ஆம் திகதிக்கு அழைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.

யாழ்ப்பாணம் மிருசுவில் பகுதியில் 2000 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 19 ஆம் திகதி, ஒரு சிறு குழந்தை உட்பட 8 பொதுமக்களை வெட்டிக் கொன்று புதைத்ததாக குற்றம் சாட்டப்பட்ட இராணுவ கோப்ரல் சுனில் ரத்நாயக்க மற்றும் ஒரு இராணுவக் குழுவினருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தின் மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் சட்டமா அதிபர் வழக்குத் தாக்கல் செய்தார்.

வழக்கு விசாரணையின் பின்னர், குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட சுனில் ரத்நாயக்கவுக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தின் மூவரடங்கிய பெஞ்ச் மரண தண்டனை விதித்தது.

அதனையடுத்து, சுனில் ரத்நாயக்க, தன்னை மரண தண்டனையிலிருந்து விடுவிக்குமாறு கோரி உயர் நீதிமன்றில் மேன்முறையீடு செய்திருந்தார்.

மே 20, 2017 அன்று, மேன்முறையீட்டு மனுவை விசாரித்த ஐந்து பேர் கொண்ட உயர் நீதிமன்ற பெஞ்ச், பிரதிவாதி சுனில் ரத்நாயக்கவுக்கு மரண தண்டனை விதித்து, கொழும்பு உயர் நீதிமன்றத்தின் மூவரடங்கிய பெஞ்ச் தீர்ப்பை உறுதி செய்தது.

அதன் பின்னர், மரண தண்டனை விதிக்கப்பட்ட சுனில் ரத்நாயக்க, 2020 மார்ச் 26 அன்று அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் விடுவிக்கப்பட்டார்.