மேலதிக பொறுப்பு மாகாண ஆளுநர்களிடம்

மாகாண சபைகள் இயங்காத பின்னணியில், மாகாண சபைகளின் செலவுகள், மாகாண நிர்வாகம், அபிவிருத்தி ஆகிய செயன்முறைகளை உரிய முறையில் பேண வேண்டிய பொறுப்பு ஆளுநர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஆலோசனைக்கு அமைய, அதிபரின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவால் சகல மாகாண ஆளுநர்களுக்கும் கடிதம் மூலம் இந்த நடைமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்றைய சவாலான காலகட்டத்தில், பொதுச் செலவினங்களை முகாமைத்துவம் செய்து, பொது மக்களுக்கான சேவைகளை சிறப்பான முறையில் முன்னெடுப்பது மிகவும் முக்கியமானது.மாகாண சபை நிர்வாகம், அபிவிருத்தி மற்றும் மாகாண சபை செலவினங்களை முகாமைத்துவம் செய்யும்போது, தேசிய கொள்கைகள் மற்றும் முன்னுரிமைகளுக்கு இணங்க செயற்படுவதைப் போன்று மக்களின் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்வதும் மிகவும் முக்கியமானதாகும்.

தமது மாகாணத்தின் அபிவிருத்தியின் முன்னுரிமைகளைக் கண்டறிவதிலும் அபிவிருத்தித் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதிலும் ஆளுநர்கள், அனைத்து மாகாண நாடாளுமன்ற உறுப்பினர்களுடனும் மற்றும் ஜனாதிபதி அலுவலகத்துடனும் சிறந்த ஒருங்கிணைப்பை பேண வேண்டும் என கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி, பதினைந்து நாட்களுக்கு ஒரு முறையாவது தமது மாகாண நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்துரையாடி, மாகாண சபையின் ஊடாக அமுல்படுத்தப்படும் அபிவிருத்திச் செயற்பாடுகள் தொடர்பாக தொடர்ச்சியான கலந்துரையாடல்களை முன்னெடுக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த இக்கட்டான காலப்பகுதியில் தேசிய இலக்குகளை அடைவதற்கு ஆளுநர்களின் பங்களிப்பு தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அவதானம் செலுத்தி வருவதாக ஜனாதிபதியின் செயலாளரின் கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.