யாழிலுள்ள திரையரங்குகளை மூட நடவடிக்கை

யாழ். மாவட்டத்தில் தொடர்ச்சியாக பதிவாகும் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கையை கருத்திற்கொண்டு, திரையரங்குகளை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நிலைமை முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் வரும் வரை திரையரங்குகள் மூடப்பட்டிருக்கும் என வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், டொக்டர் ஆறுமுகம் கேதீஸ்வரன் தெரிவித்தார்.

யாழ். குடாநாட்டில் கடந்த சில வாரங்களாக அதிகளவிலான கொரோனா நோயாளர்கள் பதிவாகி வருகின்றனர்.

கடந்த இரண்டு வாரங்களில் மாத்திரம் 300 இற்கும் மேற்பட்டவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதாக வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், டொக்டர் ஆறுமுகம் கேதீஸ்வரன் கூறினார்.

யாழ்ப்பாணம் – திருநெல்வேலி, பாரதிபுரம் மாத்திரம் கொரோனா கண்காணிப்பு பிரதேசமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, புத்தாண்டு காலத்தை முன்னிட்டு யாழ்ப்பாணத்திலுள்ள திரையரங்குகள் அனைத்தும் தொடர்ச்சியாக மூடப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கே. மகேசன் குறிப்பிட்டார்.

மேலும் பிரத்தியேக வகுப்புகள், திருமண நிகழ்வுகளுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

மேலும், யாழ். திருநெல்வேலி பொதுச்சந்தை இன்று திறக்கப்பட்டுள்ள போதிலும் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் கடைகள் தொடர்ந்தும் மூடப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.