யாழ்ப்பாணம் நாவலர் கலாசார மண்டபத்திலிருந்து மாநகரசபையை வெளியேற ஆளுநர் உத்தரவு

யாழ்ப்பாணம் நாவலர் கலாசார மண்டத்திலிருந்து எதிர்வரும் 6ஆம் திகதிக்கு முன்னர் யாழ் மாநகர சபையினை வெளியேறுமாறு வடக்கு மாகாண ஆளுநர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

யாழ்ப்பாணம் நாவலர் வீதியில் அமைந்திருக்கும் நாவலர் மண்டபம் யாழ் மாநகர சபையால் நிர்வகிக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் மத்திய அரசாங்கத்தின் கீளுள்ள இந்து கலாசார அமைச்சு குறித்த மண்டபத்தினை தங்களிடம் ஒப்படைக்குமாறு பல தடவைகள் கோரிக்கைகள் விடுத்த போது அது பல தடவைகள் யாழ்.மாநகர சபை அமர்வுகளில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

அப்போது 45 மாநகரசபை உறுப்பினர்களின் ஏகமனதான தீர்மானத்தின் பிரகாரம் குறித்த விடயம் நிராகரிக்கப்பட்டதுடன் எக்காரணம் கொண்டும் மத்திய அரசாங்கத்திடம் அதனைக் கையளிக்க மாட்டோம் என்ற தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

அதன் பிற்பாடு இந்து கலாசார அமைச்சும் யாழ்.மாநகர சபையும் இணைந்து குறித்த மண்டபத்தினை நிர்வகிப்பது தொடாடர்பில் இந்து கலாசார அமைச்சினால் வழங்கப்பட்ட வரைபு தொடர்பாக சபையில் விவாதிக்கப்பட்டு உறுப்பினார்களினால் முன்வைக்கப்பட்ட திருத்தங்கள் தொடர்பில் இந்து கலாசார அமைச்சுக்கு அறிவித்து அதனை நிர்வகிப்பது என்று முடிவெடுக்கப்பட்டது.

யாழ்.மாநகர சபையின் முதல்வராக வி. மணிவண்ணன்; பணிபுரிந்த காலத்தில் குறித்த மண்டபம் தனியார் நிதி உதவியுடன் புனரமைக்கப்பட்டது அத்துடன் சைவமகா சபையின் அனுசரணையுடன் யாழ்.மாநகர சபை ஆறுமுகநாவலரின் சிலையினையும் நிறுவியிருந்தது.

அத்துடன் குறித்த மண்டபத்தினை புனரமைப்பதற்கு இந்து கலாசார அமைச்சினால் ஒதுக்கப்பட்ட நிதி யாழ்.மாநகர சபையின் வங்கி கணக்கில் வைப்பிலிடப்பட்டு யாழ்.மாநகர சபையினால் கோள்விகோரப்பட்டு குறித்த பணிகள் யாழ்.மாநகர சபையினாலேயே மேற்கொள்ளப்பட்டது.

தற்போது உள்ளுராட்சி மன்றங்கள் கலைக்கப்பட்டுள்ள நிலையில் எதிர்வரும் ஏப்ரல் 6ஆம் திகதிக்கு முன்னர் நாவலர் கலாசார மண்டபத்திலிருந்து யாழ் மாநகர சபையை வெளியேறுமாறும் அதன் பிற்பாடு இந்து கலாசார அமைச்சுடன் கலந்துரையாடி நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் ஆளுநரால் அறிவிக்கப்பட்டுள்ளது.