யாழ். நல்லூரைச் சென்றடைந்தது பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேரணி!

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான அகிம்சை வழி பேரணியை யாழ்ப்பாணம் மாநகருக்குள் செம்மணி நல்லூர் அலங்கார வளைவில் வைத்து மக்கள் அணிதிரண்டு வரவேற்றனர். இந்த வரவேற்பில் யாழ்ப்பாணம் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அடிகளார் பங்கேற்றார்.

ஐந்தாம் நாளான இன்று காலை கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டம் ஆரம்பமானது.

முகமாலையை வந்தடைந்த போது மக்கள் அணிதிரண்டு குறித்த பேரணியை யாழ்ப்பாணத்துக்கு வரவேற்றனர். இதேவேளை, சாவகச்சேரி நகரிலும் வரவேற்பளிக்கப்பட்டு தீப்பந்தங்கள் ஏந்தி போராட்டம் இடம்பெற்றது.

இந்த நிலையில் யாழ்ப்பாணம் மாநகருக்குள் வரவேற்கும் வகையில் செம்மணி நல்லூர் அலங்கார வளைவில் வைத்து மக்கள் பேரணிக்கு வரவேற்பளித்தனர்.

வடக்கு – கிழக்கு மாகாண, சமயத் தலைவர்கள், சிவில் சமூக அமைப்புகள் மற்றும் தமிழ் தேசிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் இணைந்து மக்களை அணி திரட்டி இந்த போராட்டத்தை நடத்துகின்றனர்.

தமிழ் பேசும் மக்களின் பூர்வீக நிலங்கள் உட்பட இலங்கை முழுவதும் திட்டமிட்டு நடாத்தப்படும் இன அழிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராகவும், ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவைக்கு வடகிழக்கு தமிழ் கட்சிகள் மற்றும் சிவில் சமூக அமைப்புகள், பல்சமய ஒன்றியங்கள் இணைந்து அனுப்பி வைக்கப்பட்ட கோரிக்கைகளை நடைமுறை படுத்த கோரியும், மலையக தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த வேதனத்தை ஆயிரம் ரூபாயாக உயர்த்தக் கோரியும் முஸ்லிம் மக்களின் மத நம்பிக்கைகளை மதிக்கக் கோரியும் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.